நாகர்கோவில், ஆக. 1 –
கன்னியாகுமரி மாவட்டத்தில் கடத்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில் மீண்டும் சாரல் மழை பெய்ய தொடங்கியுள்ளது. ஒரு சில இடங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. நேற்று இரவு 9 மணியளவில் தொடங்கிய மழை இன்று காலை வரை விடிய விடிய இடைவிடாது கொட்டித் தீர்த்தது. இதனால் மாவட்டத்தின் பல பகுதிகளில் தாழ்வான இடங்களில் மழை நீர் தேங்கியுள்ளது.
குறிப்பாக மழையுடன் பலத்த காற்று வீசியது. இதனால் மரக்கிளைகள் முறிந்து விழுந்தும், மின்கம்பங்கள் அறுந்தும் விபத்துகள் ஏற்பட்டது. நகர்ப்புறம் மற்றும் கிராமப்புற பகுதிகளில் இருளில் மூழ்கின. குறிப்பாக பல பகுதிகளில் இரவு முழுவதும் மின்தடை ஏற்பட்டு பொதுமக்கள் பாதிப்படைந்தனர். இன்று காலையில் தான் மின் இணைப்புகள் சீரானது. மாவட்டத்தின் மலைப்பகுதிகள் மற்றும் அணை நீர் பிடிப்பு பகுதிகளில் மழையின் தாக்கம் மிக அதிகமாக காணப்படுகிறது. இதனால் அணைகளில் நீர்வரத்து அதிகரித்து உள்ளது.
குமரி மேற்கு மாவட்ட பகுதிகளில் சூறைக்காற்றுடன் கூடிய கனமழை பெய்ததால் கடலில் மீன் பிடித்துக் கொண்டு இருந்த நாட்டுப் படகுகள் கடலுக்குள் கவிழ்ந்தன. இரையுமன் துறையை சேர்ந்த அத்தனாஸ் (56) என்பவர் சென்ற நாட்டுப்படகு கடலில் கவிழ்ந்து, வள்ளத்தை கடல் இழுத்து சென்றது. அத்தனாஸ் நீந்தி கரையேறினார். இது போன்று கடலுக்கு மீன்பிடிக்க சென்றவர்களின் பல நாட்டுப்படகுகள் கடலில் கவிழ்ந்துள்ளன. படகுகள் மட்டும் கரை ஒதுங்கின. மீன்பிடி தொழிலாளிகள் என்ன ஆனார்கள் என்று தெரியவில்லை. மீன்பிடிக்க சென்றவர்கள் குறித்த விவரங்களை பொதுமக்கள் விசாரித்து வருகின்றனர்.
இதற்கு இடையே இன்று மீன்பிடி தடைக்காலம் முடிந்து நள்ளிரவில் விசைப்படகுகள் மீன்பிடிக்க செல்ல இருந்த நிலையில், மழையுடன் கூடிய சூறைக் காற்று வீசியதால் விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை என்பது குறிப்பிடத்தகுந்ததாகும்.


