நாகர்கோவில், ஜூலை 28 –
கன்னியாகுமரி மாவட்டத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க மற்றும் “பெண்களின் சபரிமலை” என்று பக்தர்களால் போற்றப்படும் மண்டைக்காடு பகவதி அம்மன் திருக்கோவிலில், கடந்த 5 ஆண்டுகளாகப் பல்வேறு நிர்வாக சீர்கேடுகளும், நிதி முறைகேடுகளும் தொடர்ந்து நடைபெற்று வருவதாகப் பக்தர்கள் தரப்பில் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. திருக்கோவில் ஆகம விதிகளுக்கு எதிராகவும், ஆலயத்தின் புனிதத்தைக் கெடுக்கும் வகையிலும் அங்குள்ள பொறுப்பு அதிகாரிகளால் தொடர்ந்து பல்வேறு சட்டவிரோதச் செயல்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இது தொடர்பாகச் சுசீந்திரம் இணை ஆணையர் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சருக்குப் பல்வேறு முறை மனுக்கள் அளிக்கப்பட்ட போதிலும், அறநிலையத்துறை எவ்விதத் துறைசார் நடவடிக்கையும் எடுக்காமல் மௌனம் காத்து வருகிறது.
தொடர் ஊழல் மற்றும் முறைகேடு புகார்கள் அளிக்கப்பட்ட நிலையிலும், எந்தவித விசாரணையும் இன்றி வாய்மூடி கை கட்டி நிற்கும் இந்து சமய அறநிலையத் துறையின் கண்டிப்பான மெத்தனப்போக்கைக் கண்டித்தும், உடனடி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி குமரி மாவட்ட விசுவ ஹிந்து பரிஷத் சார்பில் மாபெரும் கண்டனத் தர்ணா போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
வரும் ஆகஸ்ட் 04. ம் தேதி செவ்வாய்க்கிழமை காலை 10:30 மணிக்கு மண்டைக்காடு திருக்கோவில் ஸ்ரீகாரியம் அலுவலகம் எதிரே இந்த போராட்டம் நடக்கிறது. முக்கிய கோரிக்கைகளாக திருக்கோவில் நிர்வாகச் சீர்கேடுகள் மற்றும் முறைகேடுகளில் தொடர்புடைய பொறுப்பு அதிகாரிகளை உடனடியாகத் தற்காலிகப் பணிநீக்கம் செய்ய வேண்டும். திருக்கோவிலின் கடந்த காலக் கணக்குகள் மற்றும் நிர்வாக நடைமுறைகள் குறித்து விரிவான உள் தணிக்கை செய்ய உத்தரவிட வேண்டும். ஆகம விதிகளையும் திருக்கோவில் புனிதத்தையும் பாதுகாக்கும் வகையில் வெளிப்படைத்தன்மையான நிர்வாகத்தைச் செயல்படுத்த வேண்டும். என கோரிக்கைகள் முன்வைத்து போராட்டம் நடக்கிறது.
பொதுமக்களுக்கும், திருக்கோவிலுக்கு வருகை தரும் பக்தர்களுக்கும், போக்குவரத்துக்கும் எவ்வித இடையூறும் இன்றி, சட்டத்திற்குட்பட்டு அமைதியான முறையில் இப்போராட்டம் நடைபெறவுள்ளது. இதில் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் பெருந்திரளாகக் கலந்து கொள்ளுமாறு விஷ்வ இந்து பரிஷத் சார்பில் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.


