நாகர்கோவில், ஜூலை 25 –
நாகர்கோவில் வேப்பமூடு பூங்கா அருகே உள்ள கேப் ரோட்டில் கார் நிறுத்தும் பகுதி உள்ளது. இந்த பகுதியில் காரை பலரும் நிறுத்திவிட்டு செல்வது வழக்கம். நாகர்கோவில் மாநகராட்சியின் 24 வது வார்டு பாரதிய ஜனதா கவுன்சிலரும், கிழக்கு மண்டல மகளிர் அணி தலைவருமான ரோ சிட்டா திருமால் தனது காரை அங்கு நிறுத்தி இருந்தார். நேற்று இரவு காரை நிறுத்தி சென்றவர், இன்று காலை காரை எடுக்க வந்தார். அப்போது காரின் பின்பக்க கண்ணாடி உடைந்து காணப்பட்டது.
இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் காரை சுற்றிப் பார்த்தார். அப்போது காரின் முன் பகுதி கண்ணாடி உடைக்கப்பட்டிருந்தது. காரில் மாட்டியிருந்த பாரதிய ஜனதா கொடி சேதப்படுத்தப்பட்டு இருப்பது தெரிய வந்தது. இது குறித்த தகவல் அறிந்ததும் நாகர்கோவில் தொகுதி பொறுப்பாளர் தேவ் மற்றும் கவுன்சிலர் ரமேஷ், கிழக்கு மண்டல பொருளாளர் திருமால் மற்றும் பாரதிய ஜனதாவினர் அந்த பகுதியில் திரண்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
பின்னர் கோட்டாறு போலீசருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இந்த நிலையில் அதே பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த மேலும் இரண்டு கார்களின் கண்ணாடி கல்வீசி உடைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த கார்களின் கண்ணாடி உடைக்கப்பட்ட சம்பவம் குறித்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை போலீசார் கைப்பற்றி தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக கார் உடைக்கப்பட்டதா? அல்லது வேறு ஏதேனும் காரணமாக குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


