கோவை, ஜூலை 23 –
சுய உதவி எழுத்தாளர் பாரதி சின்னச்சாமி எழுதிய “எல்லாருக்கும் எல்லாமும் – மகளிர் சுய உதவிக் குழுக்களின் புதிய படிக்கட்டு” என்கிற நூல் கோவை கொடிசியா வளாகத்தில் நடைபெற்று வரும் 2026 – புத்தகத் திருவிழாவில் ‘வேரல் அரங்கில்’ வெளியிடப்பட்டது.
இந்த நூல் பற்றி நூலாசிரியர் பாரதி சின்னச்சாமி ஆற்றிய உரையில் தெரிவித்ததாவது: எனது இந்த நூலில் உலகத்துக்கே காய்கறிகள் இலவசம் என்கிற ஒரு முக்கியமான கட்டுரை இடம் பெற்றுள்ளது. மேலும் பெண்களின் பாதுகாப்பை பெண்களே எவ்வாறு உறுதிப்படுத்துவது? என்ற கட்டுரையும், ஜென்சி இளைஞர்களை சமூகத்திற்கு ஆக்கப்பூர்வமான பணியாற்ற கிராம விலையில்லா காய்கறி தோட்டங்கள் எவ்வாறு முக்கிய பங்காற்றுகின்றன என்பது பற்றிய முக்கியமான கட்டுரைகளும் இந்த நூலில் இடம் பெற்றுள்ளன.
அரசாங்கங்கள் பெண்களுக்கு மாதம் 1,000 ரூபாய், 2000 ரூபாய் இலவசப் பணம் வழங்கும் திட்டத்தைச் செயல்படுத்தி வருகின்றன. ஆனால், குடும்பங்களின் வறுமையை ஒழிப்பதில் இந்த இலவச பணம் வழங்கும் திட்டம் வெற்றி பெறவில்லை. அது ஒரு மானிய திட்டமாகவே, ஒரு நுகர்வு திட்டமாகவே உள்ளது. இந்த திட்டத்திற்கு மாற்றாக அரசாங்கங்கள் கிராம புறம்போக்கு நிலங்களில் மகளிர் சுய உதவிக் குழு பெண்களுக்கு கிராமத்துக்கு ஒரு காய்கறி தோட்டத்தை அமைத்துத் தந்தால், அவர்கள் குடும்பங்களின் வறுமையையும், கிராமத்தின் உணவு வறுமையையும், இந்தியாவில் ஊட்டச்சத்து உணவு பற்றாக்குறை பிரச்சனையும் நிச்சயமாக ஒழித்துக் காட்டுவார்கள்.
50 குடும்பங்கள் கொண்ட ஒரு கிராமத்தில் வீணாக, தரிசாக கிடக்கும் கிராம புறம்போக்கு நிலங்களில் 30 முருங்கை மரங்களை நடவு செய்து வளர்த்தால் போதும். அந்த கிராமத்தில் உள்ள எல்லா குடும்பங்களும் முருங்கைக் கீரையில் வாழ்நாள் முழுவதும் விலையின்றி இலவசமாகவே தன்னிறைவு அடைய முடியும். அதேபோல, அந்த கிராமத் தோட்டத்தில் 30 பப்பாளி மரங்கள், 20 கொய்யா செடிகள், 10 மா மரங்கள் என மேலும் 60 செடிகளை மட்டுமே நடவு செய்து வளர்த்தால் போதும். அந்த கிராமத்தில் உள்ள 50 குடும்பங்களும் பப்பாளி பழங்கள், கொய்யாப்பழங்கள் மற்றும் மாம்பழங்களை விலையின்றி இலவசமாகவே பெற்று தன்னிறைவு அடைய முடியும்.
இது குறித்து எனது “எல்லாருக்கும் எல்லாமும் – மகளிர் சுய உதவிக் குழுக்களின் புதிய படிக்கட்டு” என்ற இந்த நூலில் விரிவாக விளக்கி உள்ளேன் என்றார்.



