நாகர்கோவில், ஜூலை 22 –
குமரி மாவட்ட வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையின் சார்பில், தோவாளை வட்டம் சண்முகபுரம் பகுதியில் தனியார் திருமண மண்டபத்தில் மக்கள் தொடர்பு முகாம் இன்று நடந்தது. மாவட்ட ஆட்சித்தலைவர் மு.பிரதாப் கலந்துகொண்டு பொதுமக்களின் பல்வேறு கோரிக்கை மனுக்களை பெற்று, தகுதியான பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
பின்னர் பேசுகையில்: தமிழ்நாடு அரசு மக்களின் கோரிக்கைகளை அவர்கள் இருக்கும் இடத்திற்கே சென்று நிறைவேற்றும் நோக்கில் ஒவ்வொரு வருவாய் கிராமத்திற்குட்பட்ட பகுதிகளில் மக்கள் தொடர்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இம்முகாமின் நோக்கம் பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை பெற்று தகுதியான பயனாளிகளுக்கு உடனடியாக நலத்திட்ட உதவிகள் வழங்குவதேயாகும். அதனடிப்படையில் இன்று சண்முகபுரம் பகுதியில் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்கள் பெற்று தகுதியான பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.
அரசின் அனைத்து திட்டங்களும் கடைக்கோடி மக்களுக்கும் சென்றடைய வேண்டும் என்பதற்காக இத்திட்டத்தில் அனைத்து துறைகளும் இணைந்து செயல்படுகிறது. எனவே பொதுமக்களாகிய நீங்கள் அனைவரும் அரசின் திட்டங்கள் மற்றும் நலத்திட்ட உதவிகள் பெற உரிய துறைகளுக்கு விண்ணப்பித்து, பயனடையுமாறு கேட்டுக்கொள்வதோடு, நமது மாவட்டத்தில் தன்னிறைவு பெற்ற கிராமங்களாக மாற்ற அனைத்து துறை அரசு அலுவலர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு கூறினார்.
தொடர்ந்து மாவட்ட ஆட்சித்தலைவர் 11 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப்பட்டா, தாட்கோ சார்பில் 3 பயனாளிகளுக்கு தூய்மை பணியாளர்களுக்கான அட்டை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் 26 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப்பட்டா, மாவட்ட வழங்கல் துறையின் சார்பில் 5 பயனாளிகளுக்கு புதிய குடும்ப அட்டைகள், சமூக பதுகாப்பு திட்டம் சார்பில் 11 பயனாளிகளுக்கு முதியோர் உதவித்தொகை, தோட்டக்கலைத்துறையின் சார்பில் 2 பயனாளிக்கு பிரதான் மந்திரி க்ரிஷி சிஞ்சயீ யோஜனா திட்டத்தின் கீழ் சொட்டுநீர் பாசனம் அமைப்பதற்கான மானியம், வேளாண்மைத்துறையின் சார்பில் 2 பயனாளிக்கு நுண்உரம் மற்றும் உயிர் உரம், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பில் 1 பயனாளிக்கு திரவ எரிவாயு தேய்பு பெட்டி என மொத்தம் 60 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்கள். மேலும் பல்வேறு துறைகளின் சார்பில் அமைக்கப்பட்டிருந்த பல்துறை பணிவிளக்க அரங்கினை நேரில் பார்வையிட்டார்கள்.
நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் மாவட்ட வருவாய் அலுவலர் எம்.வேலுமணி, நாகர்கோவில் வருவாய் கோட்டாட்சியர் செந்தில்வேல்முருகன், துறை அலுவலர்கள், பயனாளிகள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.



