நாகர்கோவில், ஜூலை 21 –
தமிழ் மாதங்களில் ஆடி மாதம் அம்மன் வழிபாட்டுக்கு உகந்த மாதம் ஆகும். இந்த மாதத்தில் செவ்வாய், வெள்ளிக்கிழமைகள் விசேஷத்த நாட்களாகும். அதன்படி இன்று 21ஆம் தேதி ஆடி முதல் செவ்வாய்க்கிழமை ஆகும்.
குமரி மாவட்டத்தில் ஆடிச் செவ்வாய் கிழமைகள் விசேஷமாக கருதப்படுகிறது. அதன்படி இன்று மாவட்டத்திலுள்ள அம்மன் கோயில்களில் காலையிலே பெண்கள் வழிபாடு நடத்தினர். கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில், மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில், நாகர்கோவில் நடுகாட்டு இசக்கியம்மன் கோவில், சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன் கோவில், முப்பந்தல் இசக்கியம்மன் கோவில், ஆலங்குடி இசக்கியம்மன் கோவில், வடிவீஸ்ரம் அழகம்மன் கோவில், வடசேரி காமாட்சி அம்மன் கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் சிறப்பாக பூஜைகள் நடைபெற்றன. பெண்கள் நெய்விளக்கு, மாவிளக்கு ஏற்றி வழிபாடு செய்தனர்.
கிருஷ்ணன் கோயில் உள்ள ஆதிபராசக்தி கோயிலில் காலையில் நடந்த மாவிளக்கு பூஜையில் செவ்வாடை பக்தர்கள் திரளாக பங்கேற்று வழிபாடு செய்தனர். குமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற தாழக்குடியில் உள்ள அவ்வையார் அம்மன் கோயிலில் ஆடி செவ்வாய்க்கிழமைகளில் சிறப்பு வழிபாட்டில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர்.
அதன்படி இன்று காலை முதலே அவ்வையாரம்மன் கோவிலுக்கு அதிக பக்தர்கள் வந்தனர். குமரி மாவட்டம் மட்டுமின்றி கேரளாவில் இருந்து பக்தர்கள் திரளாக வந்த கலந்து கொண்டனர். புதுமண தம்பதிகள், திருமணமாகாத கன்னிப்பெண்கள் வந்து வழிபட்டால் அவர்களின் வேண்டுதல்கள் உடனடியாக நடைபெறும் என்பது நம்பிக்கையாகும். அதன்படி ஏராளமான பெண்கள் இந்த பூஜைகளில் கலந்து கொண்டனர்.



