ஈரோடு, ஜூலை 1 –
தமிழ்நாட்டில் பெண்களின் பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையை தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் தொடங்கி வைத்தார். இந்த சிறப்பு அதிரடிப்படை முதலமைச்சரின் நேரடி கண்காணிப்பில் இயங்குகிறது.
இந்த சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையினர் குற்றச் சம்பவங்கள் நடைபெறும் பகுதிகளை கண்டறிந்து கண்காணித்தல் பொது இடங்களில் கண்காணிப்பை மேம்படுத்தி, சுற்றுக்காவல் பணிகள் மேற்கொண்டு, குற்றச்சம்பவங்கள் நடைபெறாமல் தடுத்து, பொது இடங்களில் பெண்களுக்குப் பாதுகாப்பான சூழ்நிலையை உருவாக்குதல், பேருந்து நிறுத்தங்கள், இரயில் நிலையங்கள், கல்வி நிலையங்கள் மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், பெண்கள் பணியாற்றும் தனியார் நிறுவனங்கள் அமைந்துள்ள இடங்கள் உள்ளிட்ட பொதுமக்கள் அதிக அளவில் செல்லக்கூடிய மற்றும் நெருக்கடி மிகுந்த பகுதிகளில், காவல்துறையின் இருப்பை அதிக அளவில் வெளிப்படுத்தி சட்டவிரோத செயல்களைத் தடுத்தல் போன்ற பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான பாதுகாப்பான சூழலை உருவாக்கும் நோக்கில், அணுகுவதற்குக் கடினமான மற்றும் எளிதில் சென்றடைய முடியாத பகுதிகளில் திறம்படக் கண்காணிப்பதற்கும், ரோந்துப் பணிகளை மேற்கொள்ளப்படும். மேலும், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை. கல்வி நிறுவனங்கள், அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட முகமைகளுடன் ஒருங்கிணைந்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதுடன், பொதுமக்கள் பங்களிப்புடன், பெண்களின் பாதுகாப்பினை மேம்படுத்தும் பணிகளையும் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையினர் மேற்கொண்டு வருகின்றனர். பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மீதான தமிழ்நாடு முதலமைச்சரின் சமரசமற்ற கொள்கையை உறுதி செய்வதற்காக சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை உருவாக்கப்பட்டுள்ளது.
அதன்படி ஈரோடு மாவட்டத்தில், மாநகர காவல்துறை எல்லையில் 2 சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படைகள் நியமிக்கப்பட்டு, 2 குழுக்களாக சுழற்சி முறையில் மாவட்டம் முழுவதும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஒரு சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையில், 1 பெண் காவல் உதவி ஆய்வாளர் தலைமையில் 2 பெண் காவலர்கள் மற்றும் 1 ஓட்டுநர் காவலர் 4 காவலர்கள் தனி காவல் வாகனத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
மேற்படி சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படைப் படையினர் ஈரோடு மாநகர காவல்துறை எல்லைகளிலுள்ள கல்லூரிகள், பள்ளிகள், பேருந்து நிலையங்கள் நிறுத்தங்கள். குற்றங்கள் நடைபெற வாய்ப்புள்ள பகுதிகள் போன்ற இடங்களில் ரோந்து பணி மேற்கொண்டு பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களிலிருந்து பொதுமக்களை பாதுகாக்கும் பணியினை மேற்கொள்வதோடு காவல் உதவி செயலி காவல் கட்டுப்பாட்டு அறை உதவி எண், பெண்கள் பாதுகாப்பு உதவி எண், குழந்தைகள் பாதுகாப்பு உதவி எண் ஆகியவை மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்கள்.
ஈரோடு மாவட்டம் சிங்கபெண் சிறப்பு அதிரடிப்படையில் பணியாற்றும் காவல் உதவி ஆய்வாளர்கள் தெரிவிக்கும்போது: ஈரோடு மாவட்டத்திற்கு சிங்க பெண் சிறப்பு அதிரடிப்படையில் காவல் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறோம். எங்களுடன் 2 பெண் காவலர்கள் மற்றும் 1 வாகன ஓட்டுநர்கள் தலைமையில் பெண்கள் பாதுகாப்பு குறித்து மாவட்டத்தில் உள்ள அனைத்து இடங்களுக்குச் சென்று செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம். காலை 7 மணி முதல் மதியம் 2 மணி வரையிலும், மதியம் 2 மணி முதல் இரவு 12 மணி வரை இரண்டு ஷிப்ட் முறையில் பணியாற்றி வருகின்றனர். சிங்க பெண் சிறப்பு அதிரடி படை திட்டம் பொதுமக்கள் மற்றும் பெண்களிடையே மிகுந்த வரவேற்பு பெற்றுள்ளது. மேலும் எங்களது சிங்கப்பெண் படையினர் மாவட்டத்தில் உள்ள கல்லூரிகள், பள்ளிகள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கு சென்று பெண்கள் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து பெண்களிடையே விழிப்புணர்வு செய்து வருகிறோம்.
பெண்கள் எந்த பிரச்சினை வந்தாலும் தைரியமாக எதிர்கொள்ள தங்களிடம் தைரியத்துடன் எடுத்துச் சொல்ல வேண்டும். பெண்களுக்கு எதிரான குற்றங்கள் இணைய வழி மோசடிகள், சமூக வலைத்தளங்களில் பாதுகாப்பான பயன்பாடு அவசர கால உதவி எண்கள் (1091) காவல்துறையின் பாதுகாப்பு சேவைகள் வாயிலாக விழிப்புணர்வு பணிகளை மேற்கொண்டு வருகிறோம். இத்திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வரும் தமிழ்நாடு முதலமைச்சருக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம் என்று கூறினர்.
ஈரோடு மாவட்டத்தில் பணிக்கு செல்லும் பெண்கள் மற்றும் பள்ளிகள், கல்லூரிகளுக்கு செல்லும் பெண்கள் பிள்ளைகள் அனைவரும் கூறும்போது நாங்கள் தினமும் பேருந்து மூலமாகதான் சென்று வருகின்றோம். இதற்கு முன் ஏதாவது பிரச்சினை என்றால் யாரிடம் சொல்வது, எப்படி கையாள்வது என்ற விவரங்கள் தெரியாமல் இருந்தோம். ஆனால் தற்போது சிங்கப்பெண் அதிரடிப்படையின் வாயிலாக எங்கள் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பேருந்துகளில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
இதன் மூலம் பெண்கள் எந்த பிரச்சனை வந்தாலும் தைரியமாக எதிர்கொள்வதுடன், பாதுகாப்பிற்காக அழைக்க வேண்டிய அவசர கால உதவி எண்கள், சேவைகள், குறித்து நாங்கள் அறிந்து கொண்டோம். எங்களைப் போன்ற மாணவியர்கள் மட்டுமல்லாமல் அனைத்து தரப்பு பெண்களுக்கும் தற்பொழுது வெளியே செல்லும் போது பாதுகாப்பாகவும், சுதந்திரமாகவும், செல்வது போல் உணர்கிறோம். பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பிற்காக இத்திட்டத்தை அளித்த தமிழ்நாடு முதலமைச்சருக்கு எங்கள் அனைவரின் சார்பாக நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கின்றோம் என தெரிவித்தனர்.



