தேனி, ஜூன் 23 –
தேனி மாவட்டம், உத்தமபாளையம் வட்டத்தில் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் இரா.வைத்திநாதன் (23.06.2026) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
உத்தமபாளையம் வட்டதிற்குட்பட்ட, காமயகவுண்டன்பட்டியில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் அரசு மாணவர் விடுதியில் அடிப்படை வசதிகள் குறித்தும், உணவின் தரம் குறித்தும் மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, மாணவர்களின் தேவைகளுக்கு ஏற்ப விடுதியில் அனைத்து வசதிகளும் செய்து தர வேண்டும் எனவும், மாணவர்களுக்கு தரமான உணவு மற்றும் பாதுகாப்பான சூழல் தொடர்ந்து கிடைக்கப்பெறுவதை உறுதிசெய்ய வேண்டும் எனவும் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
அதனைத்தொடர்ந்து, காமயகவுண்டன்பட்டி அரசு தொடக்கப்பள்ளியில் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் மதிய உணவின் தரம், சுவை, சுகாதாரம் மற்றும் உணவுப் பொருட்களின் தரம் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து, மாணவர்களுடன் கலந்துரையாடி, பள்ளியின் வசதிகள் மற்றும் மதிய உணவு குறித்து கேட்டறிந்தார்.
மேலும், கம்பம் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் விவசாயிகளின் விளைப்பொருட்கள் சேமித்து வைக்கப்படும் இடங்கள், பராமரிக்கப்படும் பதிவேடுகள் மற்றும் விற்பனைக்கூடத்தின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு, விவசாய விளைப்பொருட்கள் விற்பனை செய்யப்படும் முறை, மின்னணு ஏல நடைமுறை மற்றும் விவசாயிகளுக்கு வழங்கப்படும் சேவைகள் குறித்து அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.
பின்னர், உத்தமபாளையம் வட்டம், காமயகவுண்டன்பட்டியில் சங்கிலி கருப்பன் தண்ணீர் பாறை கல் உடைக்கும் மகளிர்நலச்சங்கத்தின் சார்பில் நடத்தப்பட்டு வரும் கல்குவாரியினை மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
இவ்வாய்வில் உதவி இயக்குநர் (கனிமவளம்) மாரியம்மாள், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் சுரேஷ்குமார், மேலாளர் (வேளாண் விற்பனைக்குழு, தேனி) சுமதி, மேற்பார்வையாளர் (பொ) (ஒழுங்குமுறை விற்பனைக்கூடம், கம்பம்) மணிமேகலை உள்ளிட்ட துறை சார்ந்த அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.



