தேனி, ஜூன் 22 –
தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் (22.06.2026) நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து 438 கோரிக்கை மனுக்களைப் பெற்றுக்கொண்டு, 3 பயனாளிகளுக்கு ரூ.1,58,900/- மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் இரா.வைத்திநாதன் வழங்கினார்.
இக்கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை, புதிய வீட்டுமனைப் பட்டா, வேலைவாய்ப்பு மற்றும் இதர மனுக்கள் என மொத்தம் 438 கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சித்தலைவர் பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி மனுக்கள் மீது குறித்த காலத்திற்குள் விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டார்.
அதனைத்தொடர்ந்து, மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் தமிழ்நாடு முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பிட்டுத் திட்டத்தின் கீழ் 3 மாற்றுத்திறனாளிப் பயனாளிகளுக்கு ரூ.1,58,900/- மதிப்பிலான நவீன செயற்கை கால்களை மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார்.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ப.ராஜகுமார், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) ராமகிருஷ்ணன், மாவட்ட ஆட்சியரின் கூடுதல் நேர்முக உதவியாளர் (நிலம்) கதிர்வேல், தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி.) கவிதா, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் காமாட்சி உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.



