மார்த்தாண்டம், ஜூன் 16 –
நித்திரவிளை அருகே உள்ள சின்னத்துறை ஜூட்ஸ் காலனி பகுதியை சேர்ந்தவர் ஜெர்பின் (32). இவர் மீன்பிடித் தொழிலாளி. இவருக்கும் இரவிபுத்தன்துறை பகுதியை சேர்ந்த சுபினா (24) என்பவருக்கும் கடந்த ஜனவரி மாதம் திருமணம் நடந்தது.
இந்த நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை சுமார் 8 மணி அளவில் தேவாலயத்திற்கு சென்று வருவதாக கூறி வீட்டிலிருந்து சுபினா சென்றுள்ளார். ஆனால் அன்று இரவு ஆன பிறகும் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த ஜெர்பின் உறவினர்கள் வீடுகளிலும், பல்வேறு இடங்களிலும் தேடிப் பார்த்துள்ளார். ஆனால் எந்த தகவலும் கிடைக்கவில்லை.
சுபினா என்ன ஆனார்? எங்கு சென்றார்? என்பது குறித்து எந்த தகவலும் தெரியவில்லை. இதையடுத்து நித்திரவிளை போலீசில் ஜெர்பின் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். திருமணமான 5 மாதத்தில் புது பெண் மாயமான சம்பவம் உறவினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


