கோவை, மே 30 –
கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஒன்றிய அரசு முதல் கட்டமாக தமிழ்நாட்டில் உள்ள சிபிஎஸ்சி பள்ளிகளில் மூன்று மொழிகள் கட்டாயம் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது
இரு மொழிக் கொள்கையை கடைபிடிக்கும் தமிழ்நாட்டில் மூன்று மொழிகளை கட்டாயமாக திணிக்கும் மத்திய அரசின் அராஜகம் இந்தியாவின் அடிப்படை மக்கள் உரிமைக்கு எதிரானதாகும். தமிழ் மற்றும் ஆங்கிலம் என்ற இரு மொழி கொள்கை உடன் தமிழக பாடத்திட்டத்துடன் பள்ளிகளை மேம்படுத்த மத்திய அரசு நிதி தருமானால் அதனை ஏற்றுக் கொள்ளலாம். ஆனால் பள்ளிகளின் உள்கட்டமைப்பு வளர்ச்சி விட மத்திய அரசின் மொழி கொள்கை உட்பட கலாச்சார திணிப்பே இதில் பிரதான நோக்கமாக இருக்கிறது.
தேசிய கல்விக் கொள்கையின் அடிப்படை அம்சமே ஐந்தாம் வகுப்பு வரை தாய் மொழி வழி கல்விதான். ஆனால் இதுவரை ஒரு சிபிஎஸ்சி பள்ளிகளில் கூட தாய் மொழி வழி கல்வி தொடங்கப்படவில்லை. இதற்காக மத்திய அரசு எந்த தீவிர நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆனால் இந்தியையும் சமஸ்கிருதத்தையும் திணிக்கும் வகையில் மும்மொழி கொள்கையை அவசர அவசரமாக திணிப்பது எதற்காக?
வட மாநில மாணவர்களால் இரண்டு மொழிகள் கூட கற்றுக்கொள்ள இயலவில்லை. இந்த நிலையில் வட மாநில மாணவர்களுக்கும் மொழிப்பாடங்கள் ஒரு பெரிய சுமையை ஏற்படுத்தும். பி எம் ஸ்ரீ திட்டம் என்பது மாணவர்களுக்கான கல்வி வளர்ச்சிக்கான திட்டமல்ல அது இந்தி மற்றும் சமஸ்கிருதத்தை திணிப்பதற்கு கொண்டுவரப்பட்ட நயவஞ்சக திட்டம்.
தமிழ்நாட்டில் இந்தத் திட்டத்தின் கீழ் அதிகபட்சம் 800 பள்ளிகளில் இதனை அமல்படுத்த முடியும். அப்போது ஒரு பள்ளிக்கு அதிகபட்ச தொகையாக 30 லட்சம் மட்டுமே கிடைக்கும். இதில் ஒரு கழிப்பறை மட்டுமே கட்ட முடியும். மிகக்குறைந்த அளவில் நிதியை கொடுத்து தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த கல்வி அமைப்பையே தனது நோக்கத்திற்கு கையகப்படுத்துகின்ற நயவஞ்சக திட்டம்தான் பி எம் ஸ்ரீ திட்டம்.
நிதி அதிகமாக ஒதுக்குவது குறித்து எந்த அறிவிப்பும் இல்லாமல் மொழியை திணிப்பதற்கு இவ்வளவு அவசரம் ஏன்? மத்திய அரசின் கடந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையில் மொத்த செலவினம் 50 லட்சம் கோடி என்ற நிலையில் கல்விக்காக 1.28 லட்சம் கோடி மட்டுமே மத்திய அரசால் ஒதுக்கப்பட்டுள்ளது. இது மொத்த பட்ஜெட்டில் 2.5 சதவீதம் மட்டுமே.
ஆனால் கடந்த ஆண்டு தமிழ்நாடு அரசின் மொத்த செலவினம் 4.39 லட்சம் கோடி என்ற நிலையிலும் 56,000 கோடியை கல்விக்காக ஒதுக்கியது தமிழக அரசு. இது மொத்த பட்ஜெட்டில் 13 சதவீதமாகும். ஒன்றிய அரசு தமிழ்நாடு அரசை விட மிக மிகக் குறைந்த அளவு கல்விக்கு நிதி ஒதுக்கிவிட்டு கல்வி வளர்ச்சியில் அக்கறை உள்ளது போல பேசுவது மக்களை முட்டாளாக்குவதாகும்.
அதனால் மும்மொழி திணிப்பையும் பி எம் ஸ்ரீ திட்டத்தையும் மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் கடுமையாக எதிர்க்கிறது. தமிழகத்தில் மட்டுமில்லாமல் இந்தியா முழுவதும் உள்ள மாணவர் சமூகத்தின் அறிவுத்திறனை குறைக்கும் தேசிய கல்விக் கொள்கையையும் பி எம் ஸ்ரீ திட்டத்தையும் மக்களிடம் அம்பலப்படுத்துவது எங்களது நோக்கமாகும்.
தேசிய கல்விக் கொள்கையையும் பி எம் ஸ்ரீ திட்டத்தையும் தமிழ்நாட்டு மக்கள் கடுமையாக எதிர்க்கிறார்கள் என்பதை ஒன்றிய அரசிற்கு வலிமையாக தெரிவிக்க இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



