நாகர்கோவில், மே 27 –
நாகர்கோவில் மாநகராட்சியின் மாமன்ற கூட்டம் பொறுப்பு மேயர் மேரிபிரின்சி லதா தலைமையில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாநகராட்சி ஆணையாளர் நிஷாந்த் கிருஷ்ணா முன்னிலை வகித்தார். மண்டலத் தலைவர்கள் அகஸ்டினா கோகிலாவாணி, ஜவகர் செல்வகுமார், முத்துராமன் மற்றும் கவுன்சிலர்கள் ரமேஷ், உதயகுமார், நவீன்குமார், சேகர், மேரி ஜெனட் விஜிலா, அனுஷா பிரைட் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டம் தொடங்கியதும், தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள விஜய் அவர்களுக்கு நன்றி மற்றும் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. மேலும், நாகர்கோவில் மாநகராட்சி மேயராகப் பொறுப்பேற்றுள்ள மேரி பிரின்சி லதாவிற்கும் கவுன்சிலர்கள் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டனர்.
இதைத் தொடர்ந்து விவாதங்கள் தொடங்கின. அப்போது 3-ஆவது வார்டு காங்கிரஸ் கவுன்சிலர் அருள் சபிதா பேசுகையில், “எனது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் திட்டப் பணிகள் நடைபெறும் போது, அதை நான் ஆய்வுக்குச் சென்றால் ஒப்பந்ததாரர்கள் தரக்குறைவாகப் பேசுகின்றனர். இது குறித்து மாநகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை” என்று கூறி, கூட்ட அரங்கின் மையப்பகுதிக்கு வந்து திடீரென உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டார்.
சுமார் 10 நிமிடங்களுக்கும் மேலாக நீடித்த இந்தப் போராட்டத்தை அடுத்து, ஆணையாளர் உள்ளிட்ட அதிகாரிகள் கவுன்சிலரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அருள் சபிதா போராட்டத்தைக் கைவிட்டுத் தனது இருக்கைக்குத் திரும்பினார்.
தொடர்ந்து நடைபெற்ற விவாதத்தில் கவுன்சிலர்கள் பேசியதாவது: நாகர்கோவில் நகரில் கடந்த சில நாட்களாகக் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. விபத்தை தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. என கேள்வி எழுப்பினர். முன்னாள் முதல்வர் ஸ்டாலின் நாகர்கோவில் வருகையின் போது எடுக்கப்பட்ட வேகத் தடைகளை மீண்டும் அமைக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனார். தமிழக அரசு தற்போது குளங்களில் உள்ள வண்டல் மண் எடுக்க அனுமதி வழங்கி வருகிறது.
இதேபோல, நாகர்கோவில் நகர மக்களின் முக்கியக் குடிநீர் ஆதாரமான முக்கடல் அணையில் உள்ள மணலையும் எடுத்து தூர்வார உரிய அனுமதி பெற்றுத் தர வேண்டும். செம்மண்குளத்தைத் தூர்வாரி, எடுக்கப்பட்ட மணல் கரையோரமாகக் கொட்டி வைக்கப்பட்டுள்ளது. அந்த மணலை வெளியே கொண்டு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளதா? என கேள்வி எழுப்பினர். மாநகராட்சியின் பல்வேறு பகுதிகளில் குடிநீர்ப் பிரச்சினை நீடிக்கிறது. குறிப்பாக 48-ஆவது வார்டில் முறையாகத் தண்ணீர் வழங்காததால் பொதுமக்கள் போராட்டம் நடத்தும் சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளனர். 51வது வார்டிலும் குடிநீர் விநியோகம் சீராக இல்லை. அங்கு ஏற்கனவே இருந்த 7 HP மோட்டாரில் பழுது ஏற்பட்டதால், அது மாற்றப்பட்டுள்ளது. இனி தண்ணீர் தடையின்றி வழங்கப்பட வேண்டும். பழுதடைந்த போர்வெல்களைச் சுத்தம் செய்ய வேண்டும், தேவையான இடங்களில் புதிய போர்வெல்களை அமைக்க வேண்டும்.
மாநகரில் நாய்கள் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நாய்களுக்குக் கருத்தடை செய்வதாக அதிகாரிகள் கூறுகின்றனர், ஆனால் அதில் முறையான வெளிப்படைத்தன்மை இல்லை. பெண் நாய்களுக்குக் கருத்தடை செய்ய ஒரு மணி நேரம் ஆகும் என்பதால் அதிகாரிகள் தயக்கம் காட்டுகின்றனர். அதே நேரத்தில் ஆண் நாய்களுக்கு 10 நிமிடங்களில் முடிந்துவிடும் என்பதால ஆண் நாய்கள் அதிகளவில் கருத்தடை செய்யப்படுகிறது. இதனால் தெருநாய்களின் பெருக்கத்தைக் கட்டுப்படுத்த முடிவதில்லை. எனவே, பெண் நாய்களையும் பிடித்துக் கருத்தடை செய்ய வேண்டும். மாநகராட்சிப் பகுதிகளில் தெருவிளக்குகள் முறையாகப் பராமரிக்கப்படவில்லை.
கவுன்சிலர்களின் புகார்களுக்குப் பதிலளித்து (பொ)மேயர் மேரி பிரின்சிலதா கூறியதாவது: “குடிநீர்ப் பிரச்சினையைத் தீர்க்க அனைத்துத் தற்காலிக மற்றும் நிரந்தர நடவடிக்கைகளும் எடுக்கப்படும். பல்வேறு இடங்களில் பிரதான பைப்லைன்களில் உடைப்பு ஏற்பட்டு நீர்க்கசிவு உண்டாகிறது. அந்த உடைப்புகளைச் சரிசெய்தாலே குடிநீர்ப் தட்டுப்பாடு பெருமளவு நீங்கிவிடும். இதனை உடனடியாகச் சரிசெய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
போக்குவரத்து நெரிசலுக்குத் தீர்வு காண்பது தொடர்பாகப் போக்குவரத்துப் போலீசாருடன் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. விபத்துகள் நடக்கும் பகுதிகளில் சிக்னல்கள் அமைக்க வலியுறுத்தப்பட்டுள்ளது. நாய்கள் கருத்தடை விவகாரத்தில் கவுன்சிலர்கள் சுட்டிக்காட்டிய குறைபாடுகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டு, பெண் நாய்களுக்கும் முறையாகக் கருத்தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். நகரில் சுற்றித் திரியும் நாய்களைப் பிடிக்கத் தனி வாகனங்கள் பயன்படுத்தப்படும்.
செம்மண்குளம் தூர்வாரும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. அங்கிருந்து எடுக்கப்படும் மணலை கனிமவளத்துறையின் முறையான அனுமதி பெற்ற பின்னரே வெளியே கொண்டு செல்ல முடியும். அதற்கான சட்டப்பூர்வ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன” என்று தெரிவிக்கப்பட்டு மாமன்ற கூட்டம் நிறைவுபெற்றது.



