திருப்பூர், மே 21 –
திருப்பூர் க. செல்வராஜ் தலைமைக்கு உருக்கமாக எழுதிய விலகல் அறிவிப்பு கடிதத்தில் அவர் கூறியுள்ளதாவது: “மாண்புமிகு கழகத் தலைவர் அவர்களுக்கு வணக்கம். நான் 1976ம் ஆண்டு தொடங்கி 50 வருட காலமாக கழகத்திற்கு விசுவாசமாக இருந்தேன். முதன்முதலாக தொழிற்சங்கத்தில் என்னை இணைத்துக் கொண்டு, தொழிலாளர்களின் பல்வேறு பிரச்சினைகளுக்காக கழகத்தின் சார்பாக முன்னின்று போராடினேன். 1994ம் ஆண்டு வைகோ அவர்களின் பின்னால் பெருவாரியான திருப்பூர் கழக நிர்வாகிகள் சென்ற போதும், தலைவர் கலைஞர் அவர்களுக்கும், உங்களுக்கும் என்றென்றும் உறுதியாக இருக்க முடிவெடுத்தேன். மேலும், நகரக் கழக செயலாளராகவும் தொடர்ந்து பணியாற்றினேன்.
அதன்பின்னர், மக்களின் அன்பைப் பெற்று எனக்கு நகர சேர்மன், மேயர் போன்ற பொறுப்புகளை தலைவர் கலைஞர் அவர்களும், நீங்களும் அளித்தீர்கள். பின்னர் படிப்படியாக முன்னேறி மாநகர செயலாளராகவும், மாவட்ட செயலாளராகவும் தொடர்ந்து 2011 முதல் இதுவரை செயல்பட்டு வருகிறேன். கழகம் எதிர்க்கட்சியாக இருந்த 10 ஆண்டு காலத்தில் மக்கள் மற்றும் கழகப் போராட்டங்களில் தீவிரமாக பங்கேற்றதால் பல வழக்குகளை எதிர்கொண்டேன். பின்னர், 2021-ஆம் ஆண்டு திருப்பூர் தெற்கு சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டேன். கடந்த 5 வருட காலமாக சட்டமன்ற உறுப்பினராக, மாவட்ட செயலாளராகவும் மனசாட்சிப்படி திறம்பட செயலாற்றினேன்.
இருப்பினும் 2026-ஆம் ஆண்டு தொடக்கம் முதல் மாற்றுக் கட்சியிலிருந்து வந்தவர்களுக்கு அதிகாரம் மிக்க பதவிகள் வழங்கப்பட்டன. அப்பொழுது அது எனக்குள் மிகுந்த மனவேதனையை ஏற்படுத்தியது. எனக்கு ஏற்பட்ட இந்த அதிருப்தியை தெரிந்து கொண்டு 2026-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாகக் கூட பிற முக்கியக் கட்சிகளில் இருந்து எனக்கு அழைப்பு விடுத்தனர். அப்பொழுது கூட ‘கழகத் தலைவர் என்னுடைய பாதையில்தான் நிற்பேன்’ என்று கூறி அனைத்தையும் நிராகரித்தேன்.
ஆனால், 2026ம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் திருப்பூரில் உள்ள ஒரு மிக முக்கியமான தொழில் அதிபரான டாலர் பாலசுப்பிரமணியம் தங்களிடம் பொறுப்பேற்றதின் பேரில், திருப்பூர் தெற்கு சட்டமன்றத் தொகுதியில் கழகத்தின் சார்பாக போட்டியிட மாற்றுக் கட்சியிலிருந்து வந்த திருப்பூர் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் அவர்களை மேயர் பொறுப்பிலிருந்து ராஜினாமா செய்ய வைத்து திருப்பூர் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கினீர்கள். 50 ஆண்டு காலமாக திருப்பூர் மாநகராட்சியில் கழகத்திற்காக மக்கள் பணி செய்து வந்த எனக்கு எந்தவொரு முன்னறிவிப்பும் இன்றி 2026ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் நான் விருப்ப மனு அளிக்காத பல்லடம் சட்டமன்றத் தொகுதி வழங்கப்பட்டது. அப்பொழுதும் கழகத் தலைவர் அவர்களுக்காக பொறுத்துக் கொண்டு, மாவட்ட செயலாளர் என்ற முறையில் கழகம் திருப்பூர் தெற்கு மற்றும் பல்லடம் ஆகிய இரண்டு சட்டமன்றத் தொகுதிகளிலும் வெற்றி பெற கடுமையாக தேர்தல் பணியாற்றினேன்.
அது எனக்கு மிகப்பெரிய வருத்தத்தை ஏற்படுத்தியது. ஒரு தொழிலதிபர் மற்றும் மாற்றுக் கட்சியிலிருந்து வந்த தினேஷ்குமார் ஆகியோருக்கு கொடுத்த முக்கியத்துவத்தைக் கூட 50 ஆண்டு காலமாக இக்கட்டான சூழ்நிலையில் கட்டிக் காப்பாற்றிய இந்த கழக விசுவாசிக்கு ஏன் கொடுக்கவில்லை? என்னைத் தவிர வேறு யாராவது ஒரு கழக விசுவாசிக்கு திருப்பூர் தெற்கு சட்டமன்றத் தொகுதி வாய்ப்பு அளித்திருந்தால் கூட நான் மகிழ்ச்சி அடைந்திருப்பேன்.
கடந்த ஐந்து வருட காலமாக கழகத் தலைவர் உங்களிடமும், இளைஞரணி செயலாளர் அவர்களிடமும் திருப்பூர் மாநகராட்சியில் உள்ள உண்மையான அரசியல் நிலவரங்களைச் சொல்ல முயற்சித்தேன். ஆனால், உங்களைச் சுற்றியுள்ள இரண்டாம் கட்ட தலைவர்கள் அதை அனுமதிக்கவில்லை. அதன்பின்னர், திருப்பூர் மாநகராட்சியில் உள்ள குப்பை பிரச்சினைக்காக நான் முன்னின்று போராடியதைக் கூட சிலர் தங்களது சுயநல தூண்டுதலின் பெயரால் உங்களிடம் தவறாகச் சித்தரித்துக் கூறியதையும் அறிந்து மிகவும் வேதனை அடைந்தேன்.
ஒரு சட்டமன்ற உறுப்பினராக, மாவட்ட செயலாளராகவும் எனக்கே இந்த நிலைமை என்றால், சாதாரண கழகத் தொண்டர் நிலைமை நினைத்துப் பார்க்கவே எனக்கு மிகுந்த மனவருத்தம் அளிக்கிறது. 50 வருட பொது வாழ்வில் எனக்கு அரசியலைத் தவிர வேறு எதுவும் தெரியாது. மக்கள் பணி மட்டுமே எனக்கு முதன்மையானதாக இருந்தது. தற்போதைய நிகழ்வுகளால் மிகுந்த மனவேதனையோடு இன்று முதல் திருப்பூர் மத்திய மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்தும், கழகத்தின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்துப் பொறுப்பில் இருந்தும் நான் விலகுகிறேன். கடந்த ஐந்து ஆண்டு காலமாக என்னோடு தோளோடு தோள் நின்று பணியாற்றிய கழகத்தினருக்கும் தோழமைக் கட்சிகளுக்கும் என் மனமார்ந்த நெஞ்சார்ந்த நன்றிகள்.
‘ஏன் இந்த முடிவை முன்னரே எடுக்காமல் இப்பொழுது எடுக்கிறீர்கள்?’ என்ற கேள்வி கழகத்தினர் மற்றும் பொதுமக்கள் மனதிலும் எழுவது இயற்கையானதே. 2025-ஆம் ஆண்டே அந்த முடிவை நான் எடுத்துவிட்டேன். ஆனால், கழகத் தலைவருடைய ஆட்சிக்கு எந்தவொரு கெட்ட பெயரும் வந்துவிடக் கூடாது என்பதற்காக மட்டும் பொறுமை காத்து நின்றேன். கழக விசுவாசியான நான் தற்போதுள்ள கழகத்தினரின் ஒட்டுமொத்த குரலாக ஒலிக்கின்றேன். இனியாவது உண்மையான தொண்டர்களின் கருத்துகளுக்கு வாய்ப்பளியுங்கள். தற்போதைய சூழ்நிலையில் வேறெந்தக் கட்சிக்கும் செல்லும் எண்ணம் எனக்கு இல்லை.”
செய்தியாளர்களின் கேள்விகளுக்கு செல்வராஜ் பதில் அளித்த போது: திமுகவின் நிலைமை நாலாப்பக்கமும் சுற்றி வரும் பத்திரிகையாளர்களான உங்களுக்குத் தெரிந்ததே. நடந்து முடிந்த தேர்தலில் திருப்பூர் (தெற்கு) தொகுதியில் எனக்கு வாய்ப்பு கொடுத்திருந்தால் நிச்சயமாகக் கட்சிக்கு ஒரு நல்ல பெயரோடு நான் ஜெயிச்சிருப்பேன், தலைமைக்கும் நல்ல பெயர் கிடைத்திருக்கும். பல்லடம் தொகுதியில் தோல்வி அடைந்ததால் நான் கட்சியை விட்டுப் போகவில்லை. ஒரு ஆதிக்க சக்தியின் பிடியிலிருந்து இந்த கட்சியை காப்பாற்ற வேண்டும் என்பதற்காகவே போகிறேன்.
அந்த ஆதிக்க சக்தி டாலர் தோட்டம் பாலசுப்பிரமணியம் தான். சமீபகாலமாக அவருக்கும் எனக்கும் ஒரு மனவருத்தம் ஏற்பட்டது. இஸ்லாமிய மக்களுக்காக நாச்சிப்பாளையத்தில் (ரங்கநாதபுரம் பாளையம்) ஒரு ஏக்கர் நிலம் பிடித்து, அதைச் சுற்றிலும் காம்பவுண்ட் சுவர் எல்லாம் போட்டு, பட்டா வாங்கி அந்த சமுதாய பள்ளிவாசலிடம் ஒப்படைக்க முயன்றோம். அப்போது டாலர் பாலசுப்பிரமணியம் என்னை அழைத்து, அந்த பட்டாவை ரத்து செய்யச் சொன்னார். காரணம், அவருடைய சொந்தக்காரர் தோட்டம் அதற்குப் பக்கத்தில் இருக்கிறது; அதனால் அந்த கபஸ்தான் (மயானம்) அங்கு வரக்கூடாது என்பதுதான் அவருடைய நோக்கம். அதுதான் எனக்கும் அவருக்கும் ஏற்பட்ட மனஸ்தாபம்.
அதிலிருந்து அரசியலில் இருந்து என்னை அப்புறப்படுத்துவதற்கு அவர் எல்லா முயற்சிகளையும் எடுத்தார். முதலமைச்சர், உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் திருப்பூர் வரும்போது அவரது வீட்டில் தங்குவதால், அந்த செல்வாக்கைப் பயன்படுத்தி என்னை அழிக்க வேண்டும் என்று முடிவு செய்கிறார். ஆனால், என்னை அழிக்க யாராலும் முடியாது, நான் கலைஞர் விசுவாசி. டாலர் பாலசுப்பிரமணியம் மற்றும் மேயர் தினேஷ்குமார் ஆகியோர் சட்டத்திற்கு மீறி செயல்படுவது குறித்து உளவுத்துறை மற்றும் காவல்துறை மூலமாக தலைமைக்கு ரிப்போர்ட் போயிருக்கும், அது தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை.
தலைமையிடம் பேசுவதற்குண்டான சூழ்நிலை எனக்குக் கிடைக்கவில்லை. உதயநிதி ஸ்டாலினை சந்திப்பதற்கும் வாய்ப்புக் கிடைக்கவில்லை; அவருடைய பிஏ செந்திலிடம் அப்பாயிண்ட்மென்ட் கேட்டால் இன்னைக்கு நாளைக்கு என்று இழுத்தடிப்பார். ஒரு மாவட்ட செயலாளருக்கே இதான் நிலைமை. இருப்பினும் திமுக தான் எதிர்காலத்தில் மீண்டும் ஆட்சிக்கு வரும், அவரே (ஸ்டாலின்) மீண்டும் முதலமைச்சராக வருவார் என்பதில் எனக்கு திடமான நம்பிக்கை இருக்கிறது; அவருக்கு எதிராக என் யுத்தம் இல்லை.
களஆய்வு முழுமையாக நடந்து, உண்மையில் உழைப்பவன் கட்சியில் இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் இந்த போராட்டம்; இதில் என்னையே நான் பலியிட்டுக் கொண்டேன். அவர் (பாலசுப்பிரமணியம்) செல்வாக்காகத் தலைவர் வீட்டில் இருப்பதால், கோர்ட்டில் இடைக்காலத் தடை வாங்கி, கமிஷன் போட வைத்தார்கள். வக்கீல் நீதிமன்றத்தில் தவறான அறிக்கை கொடுத்ததன் மூலம், கலெக்டர் நீதிமன்ற உத்தரவைப் பெற்றுத் தந்துள்ளார். 12 வார காலத்திற்குள் அந்த இஸ்லாமிய மக்களுக்கு வேற இடம் கொடுக்க வேண்டும் என்று அந்த உத்தரவு கூறுகிறது. ஆனால், நான் என் சொந்தச் செலவில் அந்த கபஸ்தானுக்கு 1000 லோடு மண் போட்டு, அந்த மக்களைச் சரி பண்ணி வைத்துள்ளேன்.
தற்போது வேறெந்தக் கட்சியிலும் இணையும் எண்ணம் எனக்கு இல்லை. என்னை நம்பி வருபவர்களுக்கு எந்தப் பிரச்சினை வந்தாலும் என் வீடே அலுவலகமாகச் செயல்பட்டு, அவர்களுக்குப் பக்கபலமாக இருந்து பாதுகாப்பேன். என்னோடு உள்ள பலரையும் அங்கேயே (திமுகவிலேயே) இருக்குமாறு நான்தான் சொல்லியிருக்கிறேன்.
என்றைக்குத் திருப்பூர் என்ற அடையாளம் அழிக்கப்படுகிறதோ… 50 ஆண்டு காலம் ‘திருப்பூர்னா செல்வராஜ்தான் திமுக’. தொண்டர்களைப் பாதுகாப்பதில் ‘வேட்டியை மடிச்சுக்கட்டி நில்லுங்க செல்வராஜ்’ என்று சொன்னவர் நம்முடைய கழகத் தலைவர் தளபதி. இளைஞர்களுக்கு வாய்ப்பு கொடுத்ததில் எனக்குச் சந்தோஷம்தான்; ஆனால் பல்லடத்திலும் ஒரு இளைஞருக்கு வாய்ப்புக் கொடுத்திருக்கலாம் அல்லவா?
தலைமையில் என்ன மனமாற்றம் ஏற்பட்டாலும் மீண்டும் திமுகவுக்குள் பொறுப்பு கேட்டுப் போக மாட்டேன். ஆனால், திமுகவில் சாதாரண, சரியான நபர்களை உருவாக்கினால், அவர்களுக்காகக் களத்தில் நின்று ஜெயிக்க நான் பாடுபடுவேன். எனது சமூகப் பணி என்றும் தொடரும் எனவும் தெரிவித்தார்..



