கன்னியாகுமரி, மே 21 –
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு சொந்தமான தெப்பக்குளம் வடக்கு ரத வீதியில் உள்ளது. இங்கு நிரப்பப்படும் தண்ணீர், குளத்தை சுற்றி உள்ள கருங்கற்களில் ஏற்பட்டு உள்ள விரிசல் வழியாக கடலுக்கு வீணாக சென்று விடுகிறது.
மேலும் தெப்பக் குளத்துக்கு தண்ணீர் வரும் பாபநாசம் கால்வாய் பராமரிக்கப்படாததால் செடிகொடிகள் படர்ந்து மண்மூடி தூர்ந்து போய் கிடக்கிறது. மேலும் கால்வாபில் ஆக்கிரமிப்புகளும் அதிகரித்து வருகின்றன. இதனால் தெப்பத் திருவிழா நாட்களில் தண்ணீர் இல்லாத வரண்ட தெப்பக்குளத்தில் தான் சில ஆண்டுகள் தெப்பத் திருவிழா நடந்தது.
பின்னர் தெப்பக்குளத்தை சீரமைக்க ரூ.41 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்பட்டது. ஆனால் சீரமைப்பு பணிகள் நடக்கவில்லை. தற்போது வைகாசி விசாக திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. வரும் 30-ந் தேதி இரவு 9 மணிக்கு தெப்பத் திருவிழா நடக்கிறது.
இதனை கருத்தில் கொண்டு வறண்டு கிடைக்கும் பகவதி தெப்பக் குளத்தில் தண்ணீர் நிரப்பி தெப்பத் திருவிழா நடத்த பகவதி அம்மன் கோவில் பக்தர்கள் சங்கத்தினர் ஏற்பாடு செய்து வருகிறார்கள். இதற்காக மாதவபுரத்தில் உள்ள குமரிசால் குளத்தில் இருந்து ராட்சத குழாய் மூலம் தெப்பக் குளத்துக்கு தண்ணீர் கொண்டு வர முடிவு செய்யப்பட்டது.
அதன்படி குமரி சால் குளத்தில் இருந்து மின்மோட்டார் மூலம் தண்ணீர் எடுக்கப்பட்டு குழாய் வழியாக நேற்று இரவு தெப்பக்குளத்திற்கு தண்ணீர் கொண்டு வரப்பட்டது. வருகிற 30-ந் தேதிக்குள் தண்ணீர் நிரப்பி தெப்ப திருவிழாவை நடத்த ஏற்பாடுகள் நடந்து வருகிறது. இதனால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.



