தஞ்சாவூர், மே 18 –
தஞ்சாவூரில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி யின் மாநில செயலாளர் வீர பாண்டியன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: தமிழகத்தில் புதிதாக பொறுப்பேற்றுள்ள முதல்-அமைச்சர் விஜய் மக்களின் எதிர்பார்ப்புபடி நல்லாட்சி தர வேண்டும். ஒரு புதிய அரசு நிலைபெறுவதற்கு நாட்கள் ஆகும். தனது கொள்கை, நடை முறைகளில் அவற்றை முன்னெடுப்பதில் காலநேரம் தேவைப்படும்.
எனினும், அரசு மிக முக்கியமான இலாக்காக்களை இன்னும் ஒதுக்கப்படாமல் இருக்கிறது. அது குறித்து கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். அரசை ஆதரிப்போம் நாங்கள் வெளியில் இருந்து அரசுக்கு உழைக்கிற மக்களின் கோரிக்கை களை முன்மொழிவோம். தமிழகத்தின் நலன் சார்ந்த கோரிக்கைகளை முன்மொழிவோம். எங்களை பொறுத்தவரை அரசு தமிழக நலன்களில், உரிமைகளில் உறுதியாக இருக்க வேண்டும். அரசை மிகவும் உறுதியாக நாங்கள் ஆதரிப்போம். அதே வேளையில் எளிய மக்களின் குரலாய் நாங்கள் ஒலிப்போம்.
வருகின்ற ஜூன் 12ந் தேதி காவிரி டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணை திறக்க வேண்டும். அதேபோல், விவசாயிகளின் பயிர் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும். ஒன்றிய அரசு அதற்கான மானியங்களை, உதவிகளை செய்ய வேண்டும். கிடப்பில் இருக்கிற நிதிகளை தங்கு தடையின்றி தரவேண்டும். தமிழகத்திற்குரிய நீரை கர்நாடகா அரசு தங்கு தடையின்றி வழங்க வேண்டும். அதில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி உறுதியாக இருக்கும். தவறினால் ஒரு போராட்ட குரலை எழுப்புவோம், அதில் எந்த சமரசத்திற்கும் இடமில்லை.
பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு ஒன்றிய அரசு மாநிலங்களுக்கு மானியங்களை தர வேண்டும். இந்த நெருக்கடியான நேரங்களில் தமிழக அரசுக்கு நிதி தர வேண்டும். பெட்ரோல், டீசல், கியாஸ் சிலிண்டர் விலை உயர்வு குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தி, அவற்றை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.



