நாகர்கோவில், மே 5 –
கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் கன்னியாகுமரி மற்றும் விளவங்கோடு தொகுதிகளில் தலா 14 பேரும், கிள்ளியூர் மற்றும் குளச்சல் தொகுதியில் தலா 13 பேரும், பத்மநாபபுரம் தொகுதியில் 11 பேரும், நாகர்கோவில் தொகுதியில் 20 பேர் என மொத்தம் 85 வேட்பாளர்கள் 6 தொகுதிகளிலும் போட்டியிட்டனர்.
இவர்கள் அனைவரும் தங்கள் வேட்பு மனுவுடன் போட்டிக்கான கட்டணம் தொகையும் செலுத்தி இருந்தனர். இந்த பணம் அவர்கள் வாங்கும் வாக்குகளை பொறுத்து திரும்ப அளிக்கப்படுவது வழக்கம். அதாவது தொகுதியில் பதிவான வாக்குகளில் 6ல் 1 பங்கு வாக்குகள் பெற்றிருந்தால் மட்டுமே அவர்கள் கட்டிய டெபாசிட் தொகை திருப்பி வழங்கப்படும்.
இந்த வகையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் வாக்கு எண்ணிக்கையில் அதிமுக, திமுக, காங்கிரஸ், பாஜக மற்றும் தமிழக வெற்றிக்கழக வேட்பாளர்கள் கணிசமான வாக்குகளை பெற்றனர். இதன் மூலம் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் மட்டுமே டெபாசிட் தொகைகள் பெற்றன. மற்ற வேட்பாளர்கள் அனைவரும் டெபாசிட் இழந்தனர். நாம் தமிழர் கட்சி சார்பில் குமரி மாவட்டத்தில் போட்டியிட்ட 6 வேட்பாளர்கள் டெபாசிட் இழந்துள்ளனர். இவர்களுடன் சுயேட்சை வேட்பாளர்களும் டெபாசிட் இழந்துள்ளனர்.
கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட்ட 16 வேட்பாளர்களில் திமுக மற்றும் தவெக வேட்பாளர்களை தவிர மீதமுள்ள 18 பேரும் டெபாசிட் இழந்தனர். நாகர்கோவில் தொகுதியிலும் தவெக மற்றும் பாஜக வேட்பாளர்களை தவிர்த்து 17 பேர் டெபாசிட் இழந்துள்ளனர். குளச்சல் தொகுதியில் 10 பேர் டெபாசிட் இழந்துள்ளனர். பத்மநாதபுரம் தொகுதியில் 8 பேர் டெபாசிட் இழந்தனர். விளவங்கோடு தொகுதியில் 11 பேர் டெபாசிட் இழந்துள்ளனர். கிள்ளியூர் தொகுதியில் 10 பேர் டெபாசிட் இழந்தனர். மொத்தத்தில் மாவட்டம் முழுவதும் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளிலும் 67 வேட்பாளர்கள் டெபாசிட் இழந்துள்ளனர்.


