தென்காசி, மே 1 –
இந்திய அரசின் தேசிய சுகாதார ஆணையம் முன்னெடுத்து வரும் ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் மிஷன் திட்டத்தின் கீழ், அப்ஹா (ABHA – Ayushman Bharat Health Account) அடையாள அட்டை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
அப்ஹா அட்டை என்பது ஒவ்வொரு நபருக்கும் வழங்கப்படும் 14 இலக்க தனிப்பட்ட சுகாதார அடையாள எண் ஆகும். இந்த அட்டையின் மூலம், ஒருவரின் மருத்துவ பதிவுகள் அனைத்தும் ஒரே இடத்தில் டிஜிட்டல் முறையில் பாதுகாப்பாக சேமிக்கப்படுகின்றன. இதன் மூலம் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவது எளிதாகிறது.
அப்ஹா அட்டையின் முக்கிய பயன்கள்:
- அனைத்து மருத்துவ பதிவுகளையும் ஒரே கணக்கில் சேமிக்கும் வசதி
- மருத்துவமனைக்கு செல்லும் போது ஆவணங்கள் எடுத்து செல்ல வேண்டிய அவசியம் குறைவு
- மருத்துவர் உடனடியாக நோயாளியின் பழைய மருத்துவ வரலாற்றை அறிந்து சிகிச்சை அளிக்க முடியும்
- அவசர காலங்களில் விரைவான சிகிச்சை பெற உதவி
எப்படி பெறுவது?
பொதுமக்கள் தங்களின் ஆதார் அட்டை மற்றும் மொபைல் எண்ணைப் பயன்படுத்தி, அருகிலுள்ள அரசு மருத்துவமனைகளில் அப்ஹா அட்டையை இலவசமாக பதிவு செய்து பெறலாம்.
தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் அப் ஹா(ABHA) அடையாள எண் பெறுவதற்கு வசதி செய்யப்பட்டுள்ளது. அனைத்து பொதுமக்களும் தங்களின் அப்ஹா அடையாள எண்ணை உருவாக்கி வைத்துக் கொள்ளுமாறு மருத்துவத்துறை கேட்டுக் கொண்டுள்ளது. இது எதிர்காலத்தில் முழுமையான டிஜிட்டல் சுகாதார சேவைகளை பெற முக்கியமானதாக இருக்கும்.
தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு வரும், மருத்துவ பயனாளிகள் அனைவரும் தங்களுடைய ஆதார் எண்ணை கொண்டு வந்து, அதிக அளவில் இந்த திட்டத்தில் இணைந்து, தங்களின் சுகாதார சேவைகளை எளிதாக்கிக் கொள்ள வேண்டும் என மருத்துவமனை கண்காணிப்பாளர் தலைமை மருத்துவர் ஜெஸ்லின் கேட்டுக் கொண்டுள்ளார்.


