தஞ்சாவூர், ஏப். 29 –
தஞ்சாவூர் பழைய பஸ் நிலையம் அருகே கீழராஜவீதியில், எப்போதும் மக்கள் நடமாட்டம் அதிகமாக இருக்கும். இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு இரவு நேரத்தில் 2 வாலிபர்கள் மது போதையில் பட்டாக்கத்தியுடன் மோதிக்கொண்டனர். பின்னர் ஒருவருக்கொருவர் மாறி மாறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். திடீரென தாக்கிக் கொள்ள முயன்றனர். போக்குவரத்து அதிகம் உள்ள பகுதி என்பதால் அந்த வழியாக சென்ற பொதுமக்கள் அச்சமடைந்தனர்.
அப்போது அங்கிருந்த மேற்கு காவல் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றும் சம்மந்தம் தனது பணி முடிந்து வந்து கொண்டிருந்தார். அந்த நேரத்தில் சாலையில் இரு வாலிபர்களும் பட்டாக்கத்தியுடன் மோதிக் கொண்டதை பார்த்து சற்று யோசிக்காமலும், தனது ஓய்வு நேரத்திலும் கூட மிகுந்த தைரியம் மற்றும் விழிப்புணர்வுடன் துரிதமாக செயல்பட்டு பட்டாக்கத்தி வைத்திருந்த வாலிபரை தடுத்து நிறுத்தி பொதுமக்களுக்கு எவ்வித இடையூறும் ஏற்படாத வகையில் செயல்பட்டு போதையில் இருந்த அந்த வாலிபரிடம் இருந்து பட்டாக்கத்தியை பறிமுதல் செய்தார்.
தகவலறிந்து விரைந்த வந்த கிழக்கு போலீசார் பட்டாக்கத்தி வைத்திருந்த வாலிபரை பிடித்து விசாரணைக்காக தஞ்சாவூர் கிழக்கு போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். போலீசார் விசாரணையில், இரு வாலிபர்களும் ஒரே பெண்ணிடம் பழகி வந்துள்ளனர். இந்த தகவல் இருவருக்கும் தெரியாமல் இருந்த நிலையில் நேற்று முன்தினம் அந்த பெண் கூறியதால், வாலிபர் ஒருவர் மற்றொருவரை கொலை செய்து விடுவதாக கூறி பட்டாக்கத்தியுடன் போதையில் தாக்கி கொள்ள முயன்றது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வாலிபரை பிடித்து விசாரித்து வருகின்றனர். தப்பி ஓடிய நபரை தேடி வருகின்றனர்.
இந்த சம்பவம் வெகு துரிதமாகவும், சமயோஜிதமாகவும் செயல்பட்டு பட்டாக்கத்தியை பறித்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சம்மந்தத்திற்கு பொதுமக்கள் மற்றும் அனைத்து தரப்பினர் மத்தியில் பாராட்டுக்கள் குவிந்தன. அவரது கடமைப்பற்று, தன்னல மற்ற சேவை மனப்பான்மை மற்றும் பொது மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் உறுதியான செயல்பாடு மூலம் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படாமல் தடுக்கப் பட்டது என்பதும் குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.
சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சம்மந்தத்தின் இந்த சிறப்பான பணியை பாராட்டும் விதமாக, மாவட்ட எஸ்பி ஏ.சுந்தரவதனம் பாராட்டுகள் தெரிவித்து சான்றிதழ் வழங்கி கௌரவித்தார்.



