நாகர்கோவில், ஏப். 2 –
நாகர்கோவிலை அடுத்த புத்தேரி அண்ணாமலை நகரில் 88 வயது மூதாட்டி ஒருவர் வசித்து வருகிறார். இவரது மூத்த மகன் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்டார். பின்னர் 2 வது மகனுடன் மூதாட்டி வசித்து வருகிறார். அந்த மகனும் கடந்த 4 ஆண்டுகள் முன்பு இறந்துவிட்ட நிலையில் வருமானத்திற்காக மருமகள் கடையில் பணியாற்றி வருகிறார்.
இந்த நிலையில் கடந்த வாரம் சனிக்கிழமை இரவு 8:30 மணிக்கு வேலை முடிந்து மருமகள் வீட்டிற்கு வந்தபோது மூதாட்டி மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். விசாரித்த போது மதியம் வீட்டில் தனியாக இருந்தபோது வாலிபர் ஒருவர் வீட்டுக்குள் அத்துமீறி பாலியல் பலாத்காரம் செய்ததை மூதாட்டி தெரிவித்துள்ளார்.
இதையடுத்து குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மூதாட்டியை அழைத்து சென்றனர். சம்பவத்தை அறிந்த மருத்துவர்கள் இதைப் பற்றி போலீசருக்கு தகவல் தெரிவித்தனர். எனினும் பலாத்காரம் செய்தது யார்? என்று தெரியாமல் இருந்தது. இதற்கிடையே மூதாட்டி உடல்நிலை பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சையில் உள்ளார்.
இது குறித்த தகவல் அறிந்த அப்பகுதியை சேர்ந்த முன்னாள் கவுன்சிலர் மாரிமுத்து, விஷ்வ இந்து பரிசத் நிர்வாகி காளியப்பன், பாரதிய ஜனதா மாவட்ட துணை தலைவர் தேவ், பொதுச்செயலாளர் சொக்கலிங்கம் உட்பட பாரதிய ஜனதா நிர்வாகிகள் குமரி அரசு மருத்துவக் கல்லூரி சென்று மூதாட்டியின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார்.
எனினும் போலீசார் குற்றவாளியை கண்டுபிடிக்காத நிலையில் இன்று புத்தேரியில் பாரதிய ஜனதா சார்பில் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்திருந்தனர். இதற்கு இடையே தனிப்படை போலீசார் சிசிடிவி காட்சிகள் மற்றும் அப்பகுதியினரிடம் தீவிர விசாரணை நடத்தினர்.
இதில் நாகர்கோவில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் 9ம் வகுப்பு படிக்கும் அதே பகுதியை சேர்ந்த மாணவர் ஒருவர் மூதாட்டியை பலாத்காரம் செய்தது தெரியவந்துள்ளது. இதனை அடுத்து அவரிடம் நாகர்கோவில் அனைத்து மகளிர் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


