கன்னியாகுமரி ஜூன் 10
கன்னியாகுமரி முதல் சென்னை, திருவள்ளூர் வரையிலான தமிழகத்தின் கிழக்கு கடற்கரை பகுதியில் மீன்பிடி தடைகாலம் முடிவடைய உள்ள நிலையில் மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல தயாராகி வருகின்றனர்.
கன்னியாகுமரி கிழக்கு கடற்கரை பகுதியில் ஆண்டுதோறும் ஏப்ரல், மே மாதங்கள் ஆழ்கடலில் மீன்கள் இனப்பெருக்கத்துக்காக மீன்பிடி தடைகாலம் கடைபிடிக்கப்படுகிறது. இந்தக் காலங்களில் விசைப்படகுகள் ஆழ்கடலுக்குச் சென்று மீன் பிடிப்பதால் மீன் இனம் அழிந்து விடும் என்பதால், ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் 15ம் தேதி முதல் ஜூன் 14ம் தேதி வரை 61 நாட்கள் தமிழகத்தில் கிழக்குக் கடற்கரைப் பகுதியில் விசைப்படகுகள் மீன்பிடிக்க தடை விதிக்கப்படும்.இந்த ஆண்டு தமிழகத்தின் கிழக்கு கடற்கரை பகுதியில் மீன் பிடி தடை காலம் கடந்த ஏப்ரல் மாதம் 15-ம் தேதி முதல் அமலுக்கு வந்தது. இதனால் கன்னியாகுமரி அருகே உள்ள சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தை தங்கு தளமாகக் கொண்டு மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வரும் 350-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன்பிடிக்க செல்லாமல் துறைமுகத்தின் கரையோரம் நங்கூரம் பாய்ச்சி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.மீன்பிடி தடை காலத்தில் மீனவர்கள் தங்களது விசைப் படகுகளை பழுது பார்க்கும் பணியிலும் வலைகளை சீர் செய்யும் பணியிலும் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர்.தற்போது தடை காலம் முடிவடையதற்கு ஒரு சில நாட்களே இருப்பதால் மீனவர்கள் தங்களது விசைப்படகுகளில் வர்ணம் பூசுதல், என்ஜின்களை பழுது பார்தல், வலைகளை சீர் செய்தல் உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டு மீன் பிடிக்கச் செல்ல தயாராகி வருகின்றனர்.