தருமபுரி, பிப்ரவரி 06 –
தருமபுரி முதல் அரூர் வரை மாநில நெடுஞ்சாலை இரு வழி சாலையாக இருந்தது. இந்தச் சாலை வழியாக தருமபுரியில் இருந்து மொரப்பூர், அரூர், தீர்த்தமலை, திருவண்ணாமலை, சென்னை உள்ளிட்ட பகுதிகளுக்கு ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. இதனால் இச்சாலையில் போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துக்கள் தொடர்ந்து நடைபெற்று வந்தது. இதனால் வாகன ஓட்டிகளின் நலன் கருதி கடந்த 2022 மற்றும் 2023ம் ஆண்டு தருமபுரி முதல் அரூர் வரை உள்ள சாலை ரூ.313.50 கோடி மதிப்பில் நான்கு வழிச்சாலையாக தரம் உயர்த்தப்பட்டது.
இதில் தருமபுரி அடுத்த ராஜா பேட்டை பகுதியில் சுமார் ஒன்றரை கிலோ மீட்டர் தூரம் சாலை பராமரிப்பு காலம் காரணமாக நான்கு வழி சாலை அமைக்கப்படாமல் இருந்தது. இந்த நிலையில் இச்சாலையின் பராமரிப்பு காலம் முடிந்ததை தொடர்ந்து கடந்த இரு மாதங்களுக்கு முன் ராஜா பேட்டை பகுதியில் இரு வழி சாலையை நான்கு வழி சாலையாக தரம் உயர்த்தும் பணி தொடங்கியது. ஆனால் தருமபுரி முதல் மொரப்பூர் வரை சாலையில் அமைக்கப்பட்டுள்ளது போன்று ராஜா பேட்டை பகுதியில் கழிவுநீர் மற்றும் மழைநீர் கால்வாய் அமைக்கப்படவில்லை.
இதுகுறித்து இப்பகுதி மக்கள் நெடுஞ்சாலை துறை அதிகாரிகளுக்கு பலமுறை கோரிக்கை விடுத்தும் இதுவரை நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் ராஜா பேட்டை பகுதியில் கழிவு நீர் மற்றும் மழைநீர் கால்வாய் அமைக்கவில்லை. இதனால் அதிருப்தி அடைந்த ராஜா பேட்டை பொதுமக்கள் தருமபுரி – மொரப்பூர் சாலையில் மறியல் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தருமபுரி டவுன் போலீசார் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கோவிந்தசாமி ராஜா பேட்டையில் இருபுறமும் கழிவுநீர் மற்றும் மழைநீர் கால்வாய் அமைத்துத் தர வேண்டுமென்று நெடுஞ்சாலை துறை அலுவலர்களிடம் அறிவுறுத்தினார். இதைத்தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.



