இரணியல், ஜன. 29 –
திருவனந்தபுரம் இரட்டை ரயில் பாதை பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. நுள்ளிவிளை பகுதியிலும் தண்டவாளம் அமைக்கும் பணிகள் நடக்கிறது. இதற்காக தோட்டியோடு – திங்கள்நகர் மாநில நெடுஞ்சாலை நுள்ளிவிளையில் அமைந்துள்ள ரயில்வே மேம்பாலத்தை விரிவுபடுத்தும் பணிகள் இன்று காலை தொடங்கியது. இதற்கு அந்தோனி முத்து தலைமையில் சிலர் எதிர்ப்பு தெரிவித்து கோஷம் எழுப்பினர் இரணியல் போலீஸ் இன்ஸ்பெக்டர் அந்தோனி அம்மாள் மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.
உடன்பாடு ஏற்படாத நிலையில் அந்தோனி முத்து உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டனர். முக்கிய சாலை என்பதால் மாற்றுப் பாதையாக பேயன்குழி – வடக்கு நுள்ளிவிளை 4 வழிச்சாலை செல்ல இரட்டைக்கரை கால்வாய் சாலை வழியாக கொன்னக்குழிவிளை, பரசேரி ஜங்ஷன் செல்ல வேண்டும். மறு மார்க்கமாக இதே சாலையை பயன்படுத்த வேண்டும் என போக்குவரத்து காவல்துறை அறிவுறுத்தி உள்ளது. அதற்கான சோதனை ஓட்டமும் கடந்த சில நாட்களாக நடந்தது.
இந்த நிலையில் இன்று காலை ராட்சச ஹிட்டாச்சி கொண்டு பாலம் உடைக்கும் பணி தொடங்கியது. இதற்கு ஒரு சிலர் எதிர்ப்பு தெரிவித்ததால் அங்கு பரபரப்பு நிலவியது. பாலம் உடைக்கும் பணி தொடங்கியதால் நுள்ளிவிளை நெடுஞ்சாலை மூடப்பட்டுள்ளது. இரணியல் ஜங்சன், மடவிளாகம் ஜங்ஷன், கண்டன்விளை இறக்கம் ஜங்ஷன் பகுதிகளிலிருந்து வாகனங்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டு உள்ளன. 6 சக்கரம் வரை உள்ள அரசு பஸ்கள் மற்றும் இலகு ரக வாகனங்கள் பேயன்குழி பாலத்தில் இருந்து வடக்கு நுள்ளிவிளை 4 வழி சாலை வழியாக சென்று வருகின்றன. இந்த போக்குவரத்து மாற்றத்திற்கு ஓட்டுனர் பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம், ரயில்வே துறை, போக்குவரத்து காவல்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.



