நாகர்கோவில், ஜன. 12 –
குமரி மாவட்டத்தில் ரப்பர் பூங்கா அமைக்கப்படுமா என்ற கேள்விக்கு- அதெல்லாம் கிடையாது, இருக்கக்கூடியவர்களுக்கே வேலைக்கு சம்பளம் கொடுக்க முடியல, அப்புறம் ரப்பர் பூங்கா எப்படி அமைப்பது, இப்போதைக்கு இல்லை,சொல்ல முடியாது, அடுத்த ஆட்சியில் நாங்கள் தானே வருவோம் என நாகர்கோவிலில் உள்ள அரசு ரப்பர் கழகத்திற்கு ஆய்வுக்கு வந்த வனத்துறை அமைச்சர்.ராஜ கண்ணப்பன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்திருந்த நிலையில் அமைச்சரின் பேச்சிற்கு நாம் தமிழர் கட்சியின் 2026 கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி வேட்பாளரும் மாநில மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளருமான மரிய ஜெனிபர் கண்டனம் தெரிவித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: குமரி மாவட்டத்தில் உள்ள அரசு ரப்பர் கழகத்தை ஆய்வு செய்ய வந்த அமைச்சர் ராஜகண்ணப்பனிடம் நமது மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான ரப்பர் பூங்கா ஏன் வரவில்லை என்று ஒரு நிருபர் கேட்ட கேள்விக்கு குமரி மாவட்டத்தில் ரப்பர் பூங்கா அமைப்பது குறித்து தற்போது முடிவெடுக்கப்படவில்லை. அடுத்த முறை திமுக ஆட்சி தான் தொடரும். எனவே எதிர்காலத்தில் இதுகுறித்து பரிசீலிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
எனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து அரசு ரப்பர் பூங்கா கொண்டு வருவோம் எனக் கூறி தேர்தல் தோரும் வாக்குறுதிகளை அள்ளி வீசி வருகிறீர்கள். ஏன் உங்களுக்கு இது முடியாது என தெரியவில்லையா? 15 ஆண்டுகளுக்கு முன் ஆதி தமிழ் மக்களின் 500 ஏக்கர் நிலங்களை கையகப்படுத்தி அரசு ரப்பர் பூங்கா கொண்டு வருவோம் எனக் கூறும் போது உங்களுக்கு இது நடக்காது என தெரியவில்லையா? ஒரு அமைச்சர் குமரி மாவட்டத்திற்கு எதைத்தான் ஆய்வு செய்ய வந்தார். அரசு ரப்பர் கழகத்தை எப்பொழுது இழுத்து மூடலாம் என்பதை ஆய்வு செய்வதற்காக வந்தாரா?
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ரப்பர் போல வேறு எங்கும் கிடையாது. அவ்வளவு இயற்கையான ரப்பர். அதேபோல் ஏராளமான ரப்பர் பால் வடிக்கும் தொழிலாளிகள் உள்ள மாவட்டத்தில் ரப்பர் தொழிற்சாலை கொண்டுவர முடியாது என்று நீங்கள் கூறுவது முடியாதா? இல்லை உங்களால் முடியாதா? இந்த தேர்தலிலும் நீங்கள் ரப்பர் தொழிற்சாலை கொண்டு வருவேன் என்ற வாக்குறுதியை கூறுவீர்கள். கண்டிப்பாக கன்னியாகுமரி மாவட்ட மக்கள் உங்களுக்கு சரியான பாடத்தை புகட்டுவார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.



