புதுக்கடை, ஜன. 12 –
தேங்காபட்டணம் பகுதியை சேர்ந்த 39 வயதான பெண் ஒருவர் புதுக்கடை அருகே ஓட்டல் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். இவர் வேலைக்கு செல்லும் போதும் வேலை முடிந்து வீட்டிற்கு வரும்போதும் தெற்குகரை என்ற பகுதியை சேர்ந்த சுபின் (35) என்ற கொத்தனார் பெண்ணை வழிமறித்து அந்த பெண்ணின் செல்போன் நம்பரை கேட்டு தொல்லை கொடுத்து வந்துள்ளார்.
இந்த நிலையில் சம்பவ தினம் அந்த பெண் வேலை முடிந்து வீட்டுக்கு செல்லும்போது, மீண்டும் வழிமறித்து செல்போன் நம்பரை சுபின் கேட்டு அந்தப் பெண்ணை சரமரியாக தாக்கியுள்ளார். மேலும் தலை முடியை பிடித்து இழுத்து செல்போனை பறிக்க முயன்றுள்ளார். அப்போது ஓட்டல் உரிமையாளரான கிரிஸ்டல் ஜாய் (54) என்பவர் கண்டித்து தடுக்க முற்ப்பட்டுள்ளார். அவரையும் சுபின் கீழே கிடந்த கல்லால் தாக்கியுள்ளார். இதில் அவருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.
பின்னர் இருவரையும் மிரட்டி விட்டு சுபின் தப்பி ஓடி உள்ளார். இது குறித்து கிரிஸ்டல் ஜாய் புதுக்கடை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கிரிஸ்டல் ஜாய் குழித்துறை அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.


