மார்த்தாண்டம், ஜன. 8 –
திற்பரப்பு, கோதையாற்றில் களியல் பகுதியில் முதலை நடமாட்டம் இருப்பதாக வீடியோக்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றன. கடந்த சில தினங்கள் முன்பு முதலை குட்டியின் வீடியோ வெளியானது. இதையடுத்து கடந்த 3 தினங்களில் மீண்டும் 2 வீடியோக்கள் என தற்போது வரையிலும் அப்பகுதி மக்களால் மூன்று வீடியோக்கள் எடுக்கப்பட்டு அந்த வீடியோக்கள் சமூக வலைதளத்தில் வெளியிடப்பட்டது. அதுபோல களியல் வனத்துறையினருக்கும் இந்த வீடியோக்கள் பகிரப்பட்டது.
இதையடுத்து கோதையாற்றில் முதலை நடமாட்டம் இருப்பதாக வனத்துறையினரும் உறுதி செய்துள்ளனர். இதைத் தொடர்ந்து இரவு பகலாக முதலை நடமாட்டம் இருக்கிறதா? என்பதை உறுதி செய்ய டிரோன் மூலம் வனத்துறையினரும் கண்காணித்து வருகின்றனர். குறிப்பாக சம்பந்தப்பட்ட முதலை பதுங்கியதாக கூறப்பட்ட உறை கிணறு அமைந்துள்ள பகுதியில் 24 மணி நேரமும் கண்காணிப்பு பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
குறிப்பாக ஆற்றின் இரு கரைகளிலும் தலா ஒருவர் வீதம் முதலை வருகிறதா? அது எந்த பகுதியில் பதுங்கி உள்ளது? என்பதை கண்காணித்து வருகின்றனர். இதற்காக கேமராக்களும் படுத்தப்பட்டுள்ளன. மேலும் இரவிலும் வனவிலங்கு நடமாட்டத்தை கண்காணித்து புகைப்படங்கள் எடுக்கும் தெர்மல் இமேஜ் டிரான் மூலமும் கண்காணிக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் இன்று காலையில் மீண்டும் வனத்துறையினர் உறை கிணறு அமைந்துள்ள பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
இது குறித்து வனத்துறையினர் கூறுகையில்: தற்போது வரை முதலை தென்படவில்லை. அவை ஆற்றின் இரு புறங்களிலும் உள்ள செடி கொடிகளுக்குள் மறைந்திருக்கலாம். நேரம் செல்ல செல்ல வெயில் வந்ததும் செடி கொடிகளில் இருந்து வெளியே வர வாய்ப்புள்ளது. ஆனால் கண்காணிப்பு பணியை தொடர்ந்து வருகிறோம். முதலை தென்பட்ட பின் தமிழ்நாடு முதன்மை வன பாதுகாவல் துறை அனுமதி பெற்று தீயணைப்புத்துறை உள்ளிட்ட இதர துறை உதவியுடன் முதலை பிடிக்கப்படும் என்று கூறினார்கள்.
முதலை நடமாட்டம் பகுதியாக கூறப்படும் பகுதியில் கடையால் பேரூராட்சிக்கு சொந்தமான சுற்றுலா படகு துறையும், அதன் கீழ் பகுதியில் ஏராளமான மக்கள் வரும் சுற்றுலா பகுதியான திற்பரப்பு அருவி பகுதியும் உள்ளது. தற்போது இந்த காட்சிகள் சமூகவலைதளங்களில் வைரலாகி வருவதால் இங்கு வரும் சுற்றுலா பயணிகளும் அச்சமடைந்துள்ளனர்.



