குளச்சல், ஜன. 6 –
குளச்சல் பகுதியை சேர்ந்தவர் காஜா மைதீன் மகன் சுல்தான் (35). சமையல் மற்றும் இறைச்சி வெட்டும் தொழில் செய்து வந்தார். கடந்த சில நாட்களாக சாஸ்தாங்கரை என்ற பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்தார். நேற்று இரவு சுல்தான் மற்றும் அவரது தம்பி பீர்முகமது (33) ஆகியோர் வேலை முடிந்து பைக்கில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தனர். சுல்தான் பைக்கை ஓட்டி சென்றார்.
அப்போது சாஸ்தான்கரை சாலையில் செல்லும்போது எதிர்பாராத விதமாக சாலை ஓரம் உள்ள மின்கம்பத்தில் இவர்கள் பயணம் செய்த பைக் மோதியது. இதில் இரண்டு பேரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். உடனே அந்த பகுதியினர் இரண்டு பேரையும் மீட்டு குளச்சல் அரசு மருத்துவமனை கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனையில் சுல்தான் ஏற்கனவே இறந்துவிட்டார் என்று டாக்டர்கள் தெரிவித்தனர்.
பீர்முகமது குமரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அவருக்கு டாக்டர் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இது குறித்து குளச்சல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.



