மார்த்தாண்டம், ஜன. 6 –
நித்திரவிளை அருகே இரவிபுத்தன்துறை கோவில் விளாகம் பகுதியை சேர்ந்தவர் எமல்டா மகள் மெபிஷா (25). இவரை தூத்தூர் பகுதியை சேர்ந்த டெபின் என்பவர் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்தார். இந்த தம்பதியினருக்கு 3 வயதில் ஒரு ஒரு பெண் குழந்தை, 6 மாதத்தில் ஒரு ஆண் குழந்தையும் உண்டு. தற்போது கணவன் மனைவி பிரச்சினையால் மெபிஷா கடந்த சில மாதங்களாக தனது தாயார் வீட்டில் தங்கி இருந்து வந்தார்.
கடந்த 4 தேதி காலை தாயார் எமல்டா உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்கு சென்று விட்டார். மதியம் வீட்டில் வந்து பார்த்தபோது மகள் மெபிஷா மற்றும் இரண்டு குழந்தைகளையும் காணவில்லை. அவர் உறவினர் வீடுகளில் விசாரித்தும் எந்த தகவலும் கிடைக்கவில்லை. இது குறித்து எமல்டா நித்திரவிளை போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான இளம்பெண் மற்றும் குழந்தைகளை தேடி வருகின்றனர்.


