சென்னை, ஜன. 06 –
சென்னை வேளச்சேரியில் உள்ள பிரசாந்த் மருத்துவமனையின் மருத்துவர்கள் குழு, 76 வயது பெண்மணி ஒருவருக்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த ‘ஏறுமுக பெருநாடி வீக்க’ (Ascending Aortic Aneurysm) பாதிப்பிற்கு மிகச் சிக்கலான அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்து குணமளித்திருக்கிறது.
இந்நோயாளிக்கு செய்யப்பட்ட பரிசோதனையில், இதயத்திலிருந்து உடலுக்கு இரத்தம் கொண்டு செல்லும் முக்கியக் குழாயான பெருநாடி மற்றும் அதன் வளைவுப் பகுதி (Proximal arch) ஆகியவை மிகவும் விரிவடைந்திருப்பது கண்டறியப்பட்டது. பெருநாடியின் பலவீனமான பகுதி இவ்வாறு விரிவடைவதே ‘அஸெண்டிங் அயோர்டிக் அனீரிசம்’ என மருத்துவ துறையில் அழைக்கப்படுகிறது.
ஏறக்குறைய 10 மணி நேரம் நடைபெற்ற இந்த அறுவை சிகிச்சையில், பாதிக்கப்பட்ட பெருநாடிப் பகுதி மற்றும் வளைவுப் பகுதி அகற்றப்பட்டு, அதற்குப் பதிலாக 30 மிமீ ‘இன்டர்கார்ட் கிராஃப்ட்’ (Intergard graft) எனும் செயற்கைக் குழாய் பொருத்தப்பட்டது. நோயாளியின் இரத்த நாளங்களில் சுண்ணாம்புச் சத்து அதிகம் படிந்திருந்ததாலும், திசுக்கள் வலுவிழந்திருந்ததாலும், இரத்தப்போக்கு மற்றும் நரம்பியல் சிக்கல்கள் ஏற்படும் அபாயம் அதிகமாக இருந்தது.
நோயாளிக்கு பக்கவாதம் ஏற்படும் அபாயத்தைக் குறைக்க, அறுவை சிகிச்சையின் போது மூளைக்குச் செல்லும் இரத்த ஓட்டத்தைக் கண்காணிக்க என்.ஆர் எஸ் (‘NIRS’ ) எனும் நவீன தொழில்நுட்பத்தை மருத்துவர்கள் பயன்படுத்தினர். வெற்றிகரமான இந்த அறுவை சிகிச்சைக்குப் பிறகு நோயாளி எவ்வித சிக்கலுமின்றி குணமடைந்ததால், ஐந்தாவது நாளில் மருத்துவமனையிலிருந்து வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
இது குறித்துப் பேசிய பிரசாந்த் மருத்துவமனையின் இருதயம் மற்றும் மார்பு அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் கௌஷிக் கண்ணன் கூறியதாவது: “பெருநாடி வீக்கம் என்பது சுமார் 10,000 பேரில் 6 முதல் 8 பேரை பாதிக்கக்கூடியது. இப்பாதிப்பின் அறிகுறிகள் தெளிவாக குறிப்பிட்டுச் சொல்லும்படி இருக்காது என்பதால், சாதாரண நெஞ்சு வலி என்று கருதி பலர் அலட்சியமாக இருந்து விடுகின்றனர். உயர் இரத்த அழுத்தம் உள்ள முதியவர்களுக்கு பெருநாடி வீக்க பாதிப்பு காலதாமதமாக கண்டறியப்படுமானால், உயிருக்கே ஆபத்தானதாக அது மாறக்கூடும்.
முன்கூட்டியே கண்டறிதலும், துல்லியமாகத் திட்டமிடப்பட்ட அறுவை சிகிச்சையும் மட்டுமே பெருநாடி வீக்க வெடிப்பு அல்லது பக்கவாதம் போன்ற தீவிர அபாயத்தை தடுக்க உதவும். பல்வேறு துறைகளின் நிபுணர்களின் ஒருங்கிணைந்த ஒத்துழைப்பும், திறன்மிக்க செயலாக்கமும் இந்த அறுவை சிகிச்சை பாதுகாப்பாகவும், வெற்றிகரமாகவும் நடைபெறுவதற்கு உதவியது.” என்றார்.


