நாகர்கோவில், ஜன. 5 –
நாகர்கோவிலில் பிரசித்தி பெற்ற நாகராஜா கோவில் தெப்ப குளத்தில் நேற்று காலை சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவரின் சடலம் மிதந்தது. போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து குளத்துக்குள் கிடந்த சடலத்தை வெளியே மீட்டனர். உடலை பிரேத பரிசோதனைக்காக குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்தவர் யார் என வடசேரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இந்த நிலையில் நாகர்கோவில் கோட்டார் மறவன் குடியிருப்பு பகுதியை சேர்ந்த ஸ்டான்லி ராயன் என்பவரின் மனைவி முத்துக்குமாரி (31) என்பவர் தனது கணவரை இரண்டு நாட்களாக காணவில்லை எனவும், வேலைக்கு செல்வதாக கூறி சென்றவர் திரும்பி வரவில்லை என்றும், தெப்பகுளத்தில் மீட்கப்பட்ட உடலை பார்க்க வேண்டும் எனவும் வடசேரி போலீசில் தெரிவித்தார்.
இதை அடுத்து குமரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து சென்று அங்கு உடலை காட்டினர். அப்போது அது தனது கணவர் ஸ்டான்லி ராயன் என்பதை முத்துக்குமாரி உறுதி செய்தார்.
ஸ்டான்லிராயன் டைல்ஸ் ஒட்டும் வேலை செய்து வந்தார். கடந்த 2ஆம் தேதி காலை தென்காசி மாவட்டம் கடையத்திற்கு வேலைக்கு செல்வதாக கூறி சென்றார். அன்று மதியம் மனைவியிடம் பேசி உள்ளார். அதன் பின்னர் அவரைப் பற்றி எந்த தகவலும் இல்லை. செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. ஆனால் அவர் மனைவி அதன் பிறகு தேடத் தொடங்கியுள்ளார். இந்த நிலையில் தான் தெப்பக்குளத்தில் சடலம் மிதந்த தகவல் அறிந்து வந்து பார்த்த போது தனது கணவர் என்று தெரிய வந்தது.
ஸ்டான்லி ராயன் குளத்துக்குள் எப்படி விழுந்தார் என்பது தெரியவில்லை. இது தொடர்பாக அங்குள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து விசாரித்து வருகின்றனர்.


