திருவட்டார், ஜன. 4-
திருவட்டார் ஆதிகேசவப்பெருமாள் கோவில் ஓடுகள் பெயர்ந்து விழுந்து வரும் நிலையில் கோவில் படிக்கட்டின் பக்கவாட்டுச் சுவர் மீது கனரக லாரி மோதி பலத்த சேதமடைந்தது. இதனால் பக்தர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். திருவட்டார் ஆதிகேசவப்பெருமாள் கோயில் 108 வைணவத்திருப்பதிகளில் ஒன்றானது, நம்மாழ்வாரால் பாடல் இயற்றப்பட்ட திருத்தலம் என்ற சிறப்பைப்பெற்றது ஆகும். 2022ம் ஆண்டு ஜூலை மாதம் 6ந் தேதி, 418 ஆண்டுகளுக்குப்பின்னர் சீரும் சிறப்புமாக கும்பாபிஷேகம் நடைபெற்றது.
திருவட்டார் ஆதிகேசவப்பெருமாள் கோவிலில் கும்பாபிஷேகம் நடந்த பின்னர் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. குறிப்பாக சனி, ஞாயிற்று கிழமைகளில் பக்தர்கள் அதிக அளவில் வருகை தருகின்றனர்.
புராதன நகரான திருவட்டாரில் உள்ள மிகவும் பழமையான ஆதிகேசவப்பெருமாள் கோவில் பாதிப்படையக்கூடாது என்பதற்காக கோவில் வளாகத்தில் கனரக வாகனங்கள் இயக்கக்கூடாது என தடை பிறப்பிக்கப்பட்டு, கனரக வாகனங்கள் சென்று வராமல் இருக்கும் வகையில் கோவில் அருகில் உள்ள அரசுமூடு பிள்ளையார் கோவில் அருகில் இரண்டு தடுப்பு கற்கள் நாட்டப்பட்டன. 2022ம் ஆண்டு கும்பாபிஷேக நடந்தபோது கோவிலைச்சுற்றி இண்டர்லாக் போடும் வேலை நடந்தபோது தற்காலிகமாக தடுப்பு கற்களில் ஒன்றை பிடுங்கி மாற்றினார்கள். அதன்பின்னர் இண்டர்லாக் போட்ட பின்னரும் தடுப்புக்கல்லை அங்கு நாட்டாததால் கனரக வாகனங்கள் இப்பகுதியில் சென்று வருகின்றன.
இந்நிலையில் நேற்று இரவில் அப்பகுதியில் வந்த கனரக லாரி ஒன்று கோவிலின் மேற்குப்பகுதியில் உள்ள ஒரு வீட்டின் காம்பவுண்ட் சுவரை இடித்து தள்ளி விட்டு பின்னர் கோவிலின் படிக்கட்டையொட்டி போட்டப்பட்டிருந்த கருங்கல் தடுப்புச்சுவர் மீது மோதியது. இதில் யாளி உருவம் பொறிக்கப்பட்ட தடுப்புச்சுவருடன் இணைந்த கருங்கல்கள், செங்கற்கள் சேதமடைந்தன.
ஏற்கனவே கோவில் முகப்பு பகுதியில் நடுவில் உள்ள அழகிய அலங்கார ஓடுகளில் பெரும் பாலானவை கீழே விழுந்து விட்டது. இதனால் கோவிலின் தோற்றம் மாறக்கூடிய சூழல் உருவாகி உள்ளது. இந்நிலையில் கோவில் படிக்கட்டின் பக்கவாட்டுச்சுவர் கனரக லாரி மோதி சேதமடைந்திருப்பது பக்தர்களிடையே மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அறநிலையத்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டு படிக்கட்டின் பக்க வாட்டுச்சுவரை உடனே சீரமைப்பதுடன் முகப்பு பகுதியில் உள்ள ஓடுகளையும் பழமை மாறாமல் மாற்ற வேண்டும்.
அத்துடன் திருவட்டார் பேரூராட்சி நிர்வாகம் கோவில் வளாகத்தில் கனரக வாகனங்கள் சென்று வராமல் இருப்பதற்காக அரச மரம் அருகில் முன்பு தடுப்பு ஏற்படுத்துவதுடன் கனரக வாகனங்கள் கோவில் வளாகத்தை சுற்றி இயங்க தடை விதித்து அறிப்பு பலகை வைக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.



