ஈரோடு, டிசம்பர் 31 –
தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஈரோடு அரசு பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது அவர் 16 மாவட்டங்களை சேர்ந்த 4,824 நகர்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு தலா 30 விளையாட்டு உபகரணங்கள் அடங்கிய 6,890 டாக்டர் கலைஞர் விளையாட்டு உபகரண தொகுப்புகளை கொண்டு செல்லும் வாகனங்களை கொடியசைத்து வழியனுப்பி வைத்தார்.
இதன் பிறகு அவர் கூறியதாவது: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டுத்துறை சார்பில் ஈரோடு உட்பட 14 மாவட்டங்களைச் சேர்ந்த நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு ‘கலைஞர் ஸ்போர்ட்ஸ் கிட்ஸை’ வழங்குவதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகின்றேன். நம்முடைய திராவிட மாடல் ஆட்சியை, விளையாட்டுத்துறையின் பொற்காலம் என்று, நாம் மட்டும் இல்ல, இன்றைக்கு ஒட்டுமொத்த இந்தியாவும், இன்னும் பல மாநிலங்களும் நம்மை புகழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் அமைச்சர்கள் சு. முத்துசாமி, மு.பெ. சாமிநாதன், மாவட்ட ஆட்சியர் கந்தசாமி எம்பிக்கள் அந்தியூர் செல்வராஜ், கே.இ. பிரகாஷ், சட்டமன்ற உறுப்பினர்கள் வி.சி. சந்திரகுமார், ஏ.ஜி. வெங்கடாசலம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


