மார்த்தாண்டம், டிச. 17 –
களியக்காவிளை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட படந்தாலுமூடு பகுதியில் தேசீய நெடுஞ்சாலையில் இருந்து மடிச்சல் செல்லும் சாலையில் 100 மீட்டர் தொலைவில் குளிர்பானங்கள், தண்ணீர் பாட்டில் விற்பனை செய்வது போல தோற்றத்தை கடையில் அமைத்து 2 கடைகளில் நீண்ட காலமாக சட்ட விரோதமாக மது பாட்டில் விற்பனை செய்து வருகின்றன.
இங்கு 24 மணி நேரமும் மது பாட்டில் கிடைப்பதால் குமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் கேரளாவில் இருந்தும் மது கடைகள் , பார்கள் மூடப்பட்டிருக்கும் வேளைகளில் மது பிரியர்கள் அதிகாலை, நள்ளிரவு என தடை இன்றி மது வாங்கி பொது இடங்களில் வைத்தும் பொது மக்கள் நடமாடும் பகுதிகளிலும் எந்த அச்சமும் இன்றி மது அருந்தி செல்வதால் அனைத்து தரப்பு மக்களும் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர்.
விற்பனை செய்யும் கடை உரிமையாளர்களும் களியக்காவிளை காவலர்கள் சிலருக்கு மாமூல் வழங்கி வியாபாரம் செய்வதால் தயக்கமோ, அச்சமோ இல்லாமல் வெளிப்படையாக இங்கு மது விற்பனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
பொது மக்கள் சிலர் போலீசாருக்கும், மது விலக்கு போலீஸ் அதிகாரிகளுக்கும் தகவல் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என பகுதி வாசிகள் கூறுகின்றனர். மேலும் காவல்துறைக்கு தகவல் அளிக்கும் நபர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளது. இதனால் யாரும் வெளிப்படையாக புகார் அளிக்க முன் வரவில்லை. எனவே உயர் அதிகாரிகள் இந்த சட்ட விரோத மது விற்பனைக்கு நிரந்தரமாக முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என ஊர் மக்கள் மறைமுகமாக கோரிக்கை விடுத்துள்ளனர்.



