திருத்துறைப்பூண்டி, டிசம்பர் 15 –
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கட்டிமேடு, ஆதிரெங்கம், பிச்சன்கோட்டகம், சேகல் கோட்டகம் உள்ளிட்ட கிராமங்களைச் சார்ந்த பொதுமக்கள், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் கொள்ளிடம் கூட்டுக் குடிநீரையே
நீர் ஆதாரமாக நம்பி வாழ்ந்து வருகின்றனர்.
சில நாட்களாக இந்த ஊராட்சிகளில் குடிநீர் சரியாக வராததால் மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். மேற்கண்ட ஊராட்சிகளில் குடிநீர் சரியாக கிடைக்காததால் அருகிலுள்ள ஊராட்சியில் குடிநீர் வரும் இடத்தை தேடி, ஆட்டோ, பைக்கில் சென்று குடிநீர் எடுத்து வருகின்றனர்.
குடிநீரை பிடிக்க ஒரே இடத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் ஒன்று கூடுவதால், முண்டியடித்து அவர்களுக்குள் சண்டையிட்டுக் கொள்கின்றனர். கட்டிமேடு பெட்ரோல் பங்க் அருகே கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் குழாயின் மெயின் லைனில் உடைப்பு ஏற்பட்டு, மக்களுக்கு கிடைக்க வேண்டிய குடிநீர், 3 மாதங்களாக சாலையில் ஓடுகிறது.
சரியாக குடிநீர் வராத இடங்களையும், உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாகும் இடங்களையும், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் ஆய்வு செய்து, நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.



