புதுக்கடை, டிச. 12 –
புதுக்கடை அருகே கீழ்குளம் பகுதி அடுத்த பொத்தியான் விளை என்ற இடத்தை சேர்ந்தவர் ஜோஸ் (44). ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். தற்போது திருநெல்வேலியில் உள்ள ஒரு நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். கடந்த 9ம் தேதி மாலை 4 மணிக்கு ஜோஸ் தனது வீட்டில் இருந்து கடைக்கு செல்வதற்காக பைக்கில் புறப்பட்டுள்ளார்.
அப்போது அவரது மனைவி பிரபா (41) என்பவர் இப்போது எதற்கு கடைக்கு செல்கிறீர்கள்? என கேட்டு தடுத்துள்ளார். இதில் கணவன் மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த தகராறில் ஆத்திரமடைந்த ஜோஸ் தனது பைக்கை மண்ணெண்ணெய் விட்டு கொளுத்த முயன்ற போது, அவர் மீது தீப்பிடித்ததாக கூறப்படுகிறது.
இதில் உடல் கருகிய ஜோசை மீட்டு குமரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு தீவிர சிகிச்சையிலிருந்த ஜோஸ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து பிரபா அளித்த புகாரின் பேரில் புதுக்கடை போலீசார் வழக்கு பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.


