இராமேஸ்வரம், டிச. 06 –
இராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோவிலில் கார்த்திகை பௌர்ணமியையொட்டி திதி அடிப்படையில் சிவபெருமான் திரிபுராசுரனை வதம் செய்யும் சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பக்தர்கள் மற்றும் ஆன்மீகப் பெரியவர்கள் கலந்து கொண்டு ஸ்வாமி அம்பாளை தரிசனம் செய்து வழிபட்டனர்.
இராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோவில் ஆண்டு தோறும் கார்த்திகை பௌர்ணமி அன்று சிவபெருமான் திருபுராசுரனை வதம் செய்யும் நிகழ்ச்சி வெகு விமர்சியாக நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் கார்த்திகை பெளர்ணமியை முன்னிட்டு சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சி சிவ தலமான ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோவில் உள்புறத்தில் அமைந்துள்ள உலகப் புகழ் பெற்ற மூன்றாம் பிரகாரத்தில் திருக்கோவில் நிர்வாகம் சார்பில் நெய் தீபங்கள் ஏற்றி வழிபட்டும் மேலும் சுவாமி சன்னதியில் நுழைவாயில் முன் பகுதியில் விளக்குகளால் சிவலிங்கம் அமைக்கப்பட்டது. ராமநாதசுவாமி திருக்கோயில் சுவாமி அம்பாள் மற்றும் பிரியாவிடை விநாயகர் முருகர் பரிவார தேவதைகளுக்கு சிறப்பு பூஜைகள் செய்து தீபாராதணைகள் காண்பிக்கப்பட்டு அதன் பின்னர் கிழக்கு கோபுரம் மண்டபத்திற்கு கொண்டு வரப்பட்டது.
இதனை தொடர்ந்து கிழக்கு கோபுரவாயில் சுவாமி மற்றும் அம்பாள் சன்னதி முன்பு அமைக்கப்பட்டிருந்த சொக்கப்பனை சுவாமி அம்பாள் சன்னதியில் இருந்து கோவில் குருக்கள்களால் எடுத்து வரப்பட்ட தீபம் கொண்டு வரப்பட்டு பனை மரத்தின் உச்சியில் தீபம் ஏற்றப்பட்டது.
இதனைத் தொடர்ந்து திருபுராசுரனை வதம் செய்யும் பாரம்பரிய நிகழ்ச்சி தொடங்கியது. திருபுராசுரன் பனை மரத்திற்குள் ஓழிந்து கொண்டுள்ளதை கண்ட சிவபெருமான் மற்றும் பர்வதவர்த்தினி அம்பாள் மரத்திற்குள் ஒளிந்திருக்கும் திருபுராசுரனை தீ வைத்து வதம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கோவில் குருக்கள் அம்பாள் சன்னதி எதிர்ப்புறம் உள்ள சொக்கப்பனை மரத்திற்கு தீ வைத்து கொளுத்தப்பட்டது. இதன் பின்பு சுவாமி அம்பாளுக்கு தீபாராதணைகள் காண்பிக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் இணை ஆணையர் செல்லதுரை மேலாளர் வெங்கடேசன் துணை ஆணையர் ரவீந்திரன் செயல் அலுவலர் முத்துச்சாமி பேஷ்கார்கள் கமலநாதன் பஞ்சமூர்த்தி முனியசாமி நாகராஜன் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் திரளாக கலந்து கொண்டனர்.



