தக்கலை , டிச. 5 –
தக்கலை அடுத்த பள்ளியாடியில் உள்ள ரயில்வே தண்டவாளத்தில் இன்று காலையில் தலை துண்டான நிலையில் வாலிபர் ஒருவர் உடல் கிடந்தது. இதை பார்த்த அப்பகுதியினர் ரயில்வே போலீருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக நாகர்கோவில் ரயில்வே போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரித்தனர். அப்போது இறந்து கிடந்தவர் உடல் அருகே செல்போன் கிடந்தது. அதை கைப்பற்றி விசாரணை நடத்திய போது இறந்தவர் கப்பியறை பகுதியை சேர்ந்த தாமோதரன் மகன் பவித்ரன் (18) என்பது தெரிய வந்தது.
உடனடியாக உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீஸ் முதற்கட்ட விசாரணையில் பவித்ரன் ரயில் தண்டவாளத்தில் தலை வைத்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதற்கான தற்கொலைக்கான காரணம் உடனடியாக தெரியவில்லை.
தற்போது பவித்ரன் நாகர்கோவில் கோணத்தில் உள்ள பொறியியல் கல்லூரியில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் முதலாம் ஆண்டு படித்து வந்தார். கடந்த இரு நாட்களாக பவித்ரன் மனம் உடைந்த நிலையில் காணப்பட்டுள்ளார். இன்று அதிகாலை திருவனந்தபுரம் பரசுராம் எக்ஸ்பிரஸ் அல்லது மதுரை – புனலூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் விழுந்து பவித்ரன் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என கூறப்படுகிறது.



