நாகர்கோவில், டிச. 4 –
கீரிப்பாறையில் உள்ள அரசு ரப்பர் கழகத்திற்கு சொந்தமான ரப்பர் மரங்களை தனியாருக்கு குத்தகைக்கு வழங்கியதை கண்டித்து, கடந்த இரண்டாம் தேதி கஞ்சி காய்ச்சும் போராட்டத்தில் ஈடுபட்ட 80 ரப்பர் பால் வெட்டும் தொழிலாளர்களை பணி நீக்கம் செய்ததை கண்டித்து,
வடசேரியில் உள்ள அரசு ரப்பர் கழக நிர்வாக இயக்குனர் அலுவலகத்தில் ரப்பர் தோட்ட தொழிலாளர்கள் குவிந்தனர்.
மேலும் அவர்களுக்கு ஆதரவாக நாம் தமிழர் கட்சியின் மாநில மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர் மரிய ஜெனிபர், மாநில ஒருங்கிணைப்பாளர் தீபக் சாலமன் ஆகியோர்
அதிகாரியிடம் பேச்சுவார்த்தை நடத்தி உடனடியாக பணி நீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்களுக்கு வேலை வழங்க வேண்டும்,தனியாருக்கு தாரை வார்ப்பதை கைவிட்டு ரப்பர் வெட்டும் தொழிலாளர்களுக்கு 4,780 மரத்திற்கும் பால்வெட்ட அனுமதி வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். அதிகாரிகளும் விசாரணை நடத்தி முடிவெடுப்பதாக தெரிவித்தனர்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து மரிய ஜெனிபர் கூறும்போது: கன்னியாகுமரி மாவட்டம் அரசு ரப்பர் கழகத்தின் கீரிப்பாரை பிரிவில் 18ஹெக்டேர் தோட்டத்தை வனத்துறையின் கீழ் மாற்றியிருப்பதோடு தனியாருக்கு ஒப்பந்த அடிப்படையில் தாரை வார்த்திருக்கிறது தொழிலாளர் விரோத திமுக அரசு.
120க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வரும் கீரிப்பாரை பிரிவில் 80 தொழிலாளர்கள் மட்டுமே நிரந்தர வேலை உறுதியுடன் இருக்கிறார்கள் மற்றவர்கள் ஒப்பந்த அடிப்படையிலே பணியாற்றி வருகின்றனர். அரசின் இந்த திடீர் தனியார்மயப்படுத்துதலால் இவர்களின் பணி பாதுகாப்பு கேள்விக்குள்ளாகி இருக்கிறது.
கன்னியாகுமரி மாவட்டம் தரமான ரப்பர் உற்பத்தி செய்யக்கூடிய மரங்களையும், ரப்பர் உற்பத்திக்கு ஏதுவான கால நிலையையும் , திறமை வாய்ந்த தொழிலாளர்களையும் கொண்ட மாவட்டம். அரசு ரப்பர் கழகத்தின் மூலம் ரப்பர் உற்பத்தியையும் அது சார்ந்த தொழில்களையும் மேம்படுத்தி , அதுசார்ந்த மிகப்பெரிய பொருளாதாரத்தை உருவாக்கி தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த முடியும்.
ஆனால் அதை செய்யாமல் குமரி மாவட்டத்தின் அரசு ரப்பர் தொழிலாளர்களை வெறும் பால் வெட்டும் ஊழியர்கள் என்ற நிலையில் மட்டுமே வைத்திருக்கும் தமிழ்நாடு அரசு ரப்பர் கழகம் இப்போது அவர்களின் வயிற்றிலும் அடிக்கும் வகையில் தோட்டங்களை தனியாருக்கு தாரை வார்ப்பது கடும் கண்டனத்திற்குரியது.
ஒவ்வொரு தேர்தல் அறிக்கையின் போதும் குமரி மாவட்டத்தில் ரப்பர் தொழில் பூங்கா அமைப்போம் என்ற போலி வாக்குறுதியை கொடுத்து ஆட்சிக்கு வந்த இவர்கள், அதிகாரத்தை அடைந்த பின்னர் ரப்பர் தொழிலை அழிக்கும் வேலைகளை செய்து வருகின்றனர்.
பெரும் தொழில் வாய்ப்பையும் சந்தை மதிப்பையும் கொண்ட ரப்பர் உற்பத்தியை மேம்படுத்தி தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த வேண்டிய அரசு ரப்பர் கழகம், அதைச் செய்யாமல் அரசு தோட்டங்களை தனியாருக்கு குத்தகைக்கு விட்டு கமிஷன் பெற்றுக்கொண்டு தொழிலாளர்களின் எதிர்காலத்தை கேள்விக்குள்ளாக்குவதா?
இயற்கையாக அமைந்த இந்த வளத்தை பயன்படுத்தி, தற்சார்பு பொருளாதார கொள்கையை அமைத்து , ரப்பர் தொழிலாளர்களின் திறனை மேம்படுத்துதல், நவீன தொழில்நுட்பங்களை அவர்களுக்கு அறிமுகப்படுத்துதல், ரப்பர் சார்ந்த தொழிற்சாலைகளை அமைத்தல் , அதுசார்ந்த ஆய்வுகளை ஊக்கப்படுத்துதல் என தொலைநோக்குப்பார்வையுடன் செயல்பட்டு அதன்மூலம் வருமானத்தை ஈட்டவேண்டிய அரசு அதை எதுவும் செய்யாமல் நேரடியாக அரசு தோட்டங்களை குத்தகைக்கு விட்டு தரகைப்பெற்றுக்கொள்வது தான் வருமானத்திற்காக வழி என்ற நிலையில் செயல்படுவது எந்தமாதிரியான வளர்ச்சி திட்டம்? உங்கள் குத்தகை – தரகு அடிப்படையிலான திட்டங்களால் அரசிற்கு சொற்ப வருமானம் கிடைக்கும். ஆனால் இந்த தொழிலையும் அரசையும் நம்பியிருக்கும் தொழிலாளர்களின் நிலை என்ன? அவர்களின் வளர்ச்சியும் எதிர்காலமும் ஏன் அரசிற்கு ஒரு பொருட்டாக தெரியவில்லை?
அரசின் இந்த மக்கள் விரோத போக்கை எதிர்த்து கிரிப்பாறை ரப்பர் தொழிலாளர்கள் முன்னெடுத்த போராட்டத்தில் நாம் தமிழர் கட்சி களத்தில் இணைந்திருக்கிறோம். அரசின் இம் முடிவுகள் திரும்பப்பெறும் வரை, தொழிலாளர்களின் கோரிக்கைகள் நிறைவேறும் வரை, நம் மக்களோடு களத்தில் நிற்போம். என அவர் தெரிவித்தார்.



