விளாத்திகுளம், நவம்பர் 29 –
தூத்துக்குடி மாவட்டம் புதூர் பகுதிகளில் விவசாயிகள் இந்தாண்டு பயிர் செய்துள்ள சிறுதானியங்கள், பயறு வகைகள், வெங்காயம், மிளகாய், கொத்தமல்லி, சூரிய காந்தி போன்றவற்றிற்கு கடந்த 20 நாட்களுக்கு மேலாக பயிர்காப்பீடு செய்து வருகின்றனர். பட்டாவில் நேரடி பெயர் இல்லாதவர்கள், ஒத்தி மற்றும் கட்டுக்குத்தகைக்கு நிலங்களை விவசாயம் செய்பவர்கள், இறந்த முன்னோர்கள் பெயரில் இருந்து பட்டாவில் பெயர் மாற்றம் செய்யாத வாரிசுகள் பயிர் காப்பீடு செய்ய முடியாத நிலையை அரசு ஏற்படுத்தி உள்ளதால் மிகவும் விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர்.
இதனால் நேரடி பட்டா இல்லாதவர்கள் விவசாயிகள் பயிர்க்காப்பீடு செய்ய பழைய நிலையை பின்பற்றக்கோரி இன்று புதூர் வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், அடையாள அட்டை பதிவு எண் பெறாத விவசாயிகள் பயிர் காப்பீடு செய்ய முடியாத வகையில் செயலி நிறுத்தம் செய்துள்ளதால், அதனை உடனடியாக சரிசெய்வதோடு, மக்காச்சோளம் பயிர் காப்பீடு செய்யும் கால அவகாசத்தை டிசம்-15 வரை நீட்டிப்பு செய்ய வேண்டும் என்று விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
அதுமட்டுமின்றி, கடந்தாண்டு டிசம்பர் 2024 மாதம் பெய்த தொடர் மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு அறிவிக்கப்பட்ட நிவாரணத்தொகை மற்றும் பயிர்க்காப்பீட்டுத்தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என்றும் தெரிவித்தனர். மேலும், விவசாயிகளின் கோரிக்கையை அரசு நிறைவேற்ற தவறும்பட்சத்தில் மிகப்பெரிய அளவில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடுவோம் என விவசாயிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.



