குளச்சல், நவ. 17 –
கருங்கல் அருகே காக்கவிளை பகுதியை சேர்ந்தவர் பிஜிலிகர் (44). அரசு போக்குவரத்து கழக குளச்சல் பணிமனையில் கண்டக்டராக வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் தடம் 88 பி/சி குறும்பனை வழியாக குளச்சலில் இருந்து கருங்கல் செல்லும் சர்குலர் பஸ்ஸில் பணியில் இருந்தார். இரவு 7:20 மணி அளவில் பஸ் குளச்சல் அண்ணா சிலை சந்திப்பு வந்துவிட்டு மீண்டும் கருங்கல் செல்ல முற்பட்டது.
அப்போது குறும்பனை இனிகோ நகரை சேர்ந்த ராஜன் (56) என்பவர் பஸ்ஸில் ஏறினார். அவர் மது போதையில் இருந்துள்ளார். கண்டக்டர் டிக்கெட் எடுக்க கூறினார். ஆனால் அவர் டிக்கெட் எடுக்க மறுத்து திடீரென கண்டக்டரின் சட்டையை பிடித்து தகராறு செய்தார். பின்னர் திடீரென ராஜன், கண்டக்டர் பிஜிலிகரை பிடித்து கீழே தள்ளினார். இதில் கண்டக்டர் பின்பக்க படிக்கட்டு வழியாக வெளியே விழுந்தார். கீழே விழுந்த கண்டக்டரை மீண்டும் ராஜன் தாக்கியுள்ளார். காயமடைந்த பிஜிலிகர் அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்த சம்பவத்தை அறிந்த பணிமனை போக்குவரத்து தொழிலாளர்கள் மருத்துமனை முன்பு திரண்டனர். அவர்கள் கண்டக்டர் பிஜிலிகரை தாக்கியவர் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் குறும்பனை ஊருக்கு பேருந்துகளை இயக்க மாட்டோம் என்று கூறினார்கள். இந்த சம்பவத்தால் குளச்சல் அரசு மருத்துவமனை முன்பு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து குளச்சல் போலீசார் ராஜன் மீது, அரசு பணி செய்யாமல் தடுத்து மிரட்டல் விடுத்தது உட்பட நான்கு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து நேற்று அவரை கைது செய்தனர்.


