திருத்துறைப்பூண்டி, நவம்பர் 8 –
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள மேட்டுப்பாளையம் கிராமத்தை சேர்ந்த குமரவேல் மகன் சதீஷ் (40). திருமணம் ஆகாத இவர் வேலைக்காக மலேசியா நாட்டிற்கு சென்று கடந்த 10-ஆண்டாக அங்குள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.
இந்நிலையில் கடந்த அக்டோபர் மாதம் 23-ஆம் தேதி மாரடைப்பு ஏற்பட்டு சதீஷ் இறந்துவிட்டதாக அவர் பணியாற்றி வந்த கடையின் உரிமையாளர் மேட்டுப்பாளையம் கிராமத்தில் வசிக்கும் சதீஷின் உறவினருக்கு தகவல் தெரிவித்தார். இத்தகவலை கேட்டு அதிர்ச்சியடைந்த சதீஷின் உறவினர்கள், உடலை சொந்த ஊருக்கு கொண்டு வந்து அடக்கம் செய்ய உதவிட கோரி, திருவாரூர் கலெக்டர் மோகனச்சந்திரனை சந்தித்து மனு அளித்தனர்.
மனு அளித்து 10-நாட்களுக்கு மேலானதால் திருத்துறைப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் மாரிமுத்துவை சந்தித்து கோரிக்கை வைத்தனர். அதன்படி சட்டமன்ற உறுப்பினர் மாரிமுத்து முயற்சியால், எம்ஐ கேஸ்கட் அமைப்பின் உதவியுடன் 17-நாட்களுக்கு பிறகு
மலேசியாவில் இறந்த சதீஷின் உடல் விமானம் மூலம் திருச்சி கொண்டு வரப்பட்டு அங்கிருந்து ஆம்புலன்ஸ் மூலம் இன்று சொந்த ஊரான திருத்துறைப்பூண்டி அருகே உள்ள மேட்டுப்பாளையம் கிராமத்திற்கு கொண்டு வரப்பட்டது.
உடலை கொண்டு வருவதற்கான அனைத்து நடைமுறைகளையும் ஆதிரெங்கம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் வீரசேகர் பொறுப்பேற்று செய்து முடித்தார். இறந்த சதீஷின் பூதஉடலை கண்டு மேட்டுப்பாளையம் கிராமமே சோகத்தில் மூழ்கியது. ஒரு பெண் திருமணமாகி சென்ற நிலையில், மாற்றுத்திறனாளியான ஒரு பெண்ணை வைத்துக் கொண்டு, மகனை இழந்து மிகவும் சிரமப்படும் இந்த வயது முதிர்ந்த தம்பதியினருக்கு அரசு ஏதேனும் நிதிஉதவி செய்திட வேண்டுமென பொதுமக்கள் கோரிக்க
விடுக்கின்றனர்.



