இரணியல், நவ. 3 –
இரணியல் அருகே கண்டன் விளை பகுதியை சேர்ந்தவர் ராஜகோபால் என்ற ராஜன் (54) லாரி டிரைவர். இவர் மீது கொலை உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளன. ராஜன் திருமணம் செய்து கொள்ளாமல் பல ஆண்டுகளுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறி ரவுடியாக வலம் வந்துள்ளார். தனக்கு எதிரானவர்களை கொலை செய்வது, மிரட்டுவது, கூலிக்கு கொலை செய்வது போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார்.
இந்த நிலையில் கடந்த 2023 ஆம் ஆண்டு குளச்சலில் அருள் பாபி என்ற எழுத்தாளரை கத்தியால் குத்தி கொலை செய்தார். இந்த வழக்கில் போலீசார் ராஜனை கைது செய்தனர். அவரை ஜாமில் எடுக்க யாரும் முன் வராததால் ஆத்திரத்தில் கழிவறை சென்று அங்கு டைல்ஸ்களை உடைத்து கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் நடந்தது.
தற்போது ஜாமினில் வெளிவந்த ராஜன் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு சொந்த ஊரான பேயன்குழி பகுதிக்கு வந்துள்ளார். இந்த நிலையில் அவரது அண்ணன் உறவு முறையான கோபாலகிருஷ்ணன் (63) என்பவர் மனைவி விஜயலட்சுமியிடம் ராஜன் தவறாக நடக்க முயன்றதாக கூறப்படுகிறது. இது குறித்து கோபாலகிருஷ்ணன் நேற்று முன்தனம் இரவு ராஜனிடம் கேட்டுள்ளார். அப்போது தகராறு ஏற்பட்டு கைகலப்பானது.
இதனால் ஆத்திரத்தில் கோபாலகிருஷ்ணன் அருகில் கிடந்த கைத்தடியால் ராஜனை சரமாரியாக அடித்து தாக்கியுள்ளார். இதில் படுகாயம் ராஜன் கீழே சரிந்தார். கோபாலகிருஷ்ணன் அங்கிருந்து சென்று விட்டார். ராஜன் சிறிது நேரத்தில் இறந்துள்ளார். இதை அறிந்த கோபாலகிருஷ்ணன் உடனடியாக இரணியல் காவல் நிலையத்தில் சென்று சரணடைந்தார். போலீசார் சம்பவ இடம் சென்று ரத்த வெள்ளத்தில் கடந்த ராஜன் உடலை கைப்பற்றி குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து போலீசர் விசாரணை நடத்தி வருகின்றனர்.



