மார்த்தாண்டம், அக். 27 –
மார்த்தாண்டம் அருகே கரவிளாகம் பகுதியை சேர்ந்தவர் பாபு (45). ஆட்டோ டிரைவர். இவர் நேற்று முன்தினம் மாலை ஆட்டோவில் வீட்டிற்கு சென்று கொண்டு இருந்தார். அப்போது அந்த பகுதியில் கடும் மழை பெய்து கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அவர் செல்லும் வழியில் வண்ணான்குளம் என்ற குளம் உள்ளது. குளத்தின் கரையோரம் ஆட்டோ சென்று கொண்டிருந்தபோது, எதிரே அரசு பஸ் ஒன்று வந்துள்ளது. அந்த நேரம் பஸ்ஸுக்கு வழி விடுவதற்காக பாபு ஆட்டோவை கரையோரம் ஒதுக்கி உள்ளார். ஆனால் எதிர்பாராத விதமாக ஆட்டோ நிலை தடுமாறி குளத்துக்குள் பாய்ந்தது. அரசு பஸ் அங்கிருந்து சென்று விட்டது.
அந்த பகுதியில் மழை பெய்ததால் சாலையில் யாரும் வராததால் குளத்துக்குள் ஆட்டோ பாய்ந்ததை யாரும் கவனிக்கவில்லை. இதை அடுத்து சிறு நேரத்திற்கு பின்னர் குளத்து நீரில் ஆட்டோவின் மேல் பகுதி சிறிதளவு தெரிந்து உள்ளது. இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக ஆட்டோவை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். பின்னர் கயிறு கட்டி ஆட்டோவை மீட்டனர். ஆனால் பாபு உயிரிழந்த நிலையில் காணப்பட்டார். ஆட்டோவில் இருந்து வெளியேற முடியாமல் பாபு இறந்துள்ளார். இது குறித்த புகாரின் பேரில் மார்த்தாண்டம் போலீசார் பாபுவின் உடலை மீட்டு குழுத் துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



