மார்த்தாண்டம், அக். 7 –
மார்த்தாண்டம் மேம்பாலம் குழித்துறை தேசிய நெடுஞ்சாலை முடிந்ததும் துவங்கி பம்மத்தில் நிறைவடைகிறது. சுமார் 2 கிலோ மீட்டர் நீளமுடையது. இந்த மேம்பாலத்தின் கீழ்பகுதியில் மத்திய பகுதியில் இரு ஒரு வழி சாலையும், பிரித்து பைக்குகள் வைப்பதற்கு பார்க்கிங் ஏரியா உள்ளது.
இந்த பகுதி ரோட்டில் இருபுறங்களில் உள்ள கடைகளுக்கு வரும் வாடிக்கையாளர்கள் வாகனங்கள் நிறுத்துவதற்கு வசதியாக அமைந்தது. ஆனால் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த ஏராளமானோர் தினசரி அதிகாலை வேளையில் 8 மணிக்கு முன்பே பைக்கில் வந்து இங்கு நிறுத்தி விட்டு நாகர்கோவில், மற்றும் திருவனந்தபுரம் பகுதிக்கு வேலைக்கு செல்கின்றனர்.
பிறகு மாலை 7 மணிக்கு பிறகு வந்து எடுத்து செல்கின்றனர். மேலும் சிலர் பைக்கை இங்கு வைத்துவிட்டு மதுரை, சென்னை, எர்ணாகுளம் போன்ற பகுதிக்கு செல்வதும் உண்டு. இதனால் பைக்குகள் ஒரு வாரம் இந்த பார்க்கிங் ஏரியாவில் நிறுத்தப்படுகிறது. இதனால் இந்த பகுதி வியாபாரிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். வாடிக்கையாளர்கள் பைக் நிறுத்த இடம் இல்லாமல் தவிக்கின்றனர்.
இது தொடர்பாக எழுந்த புகாரின் பேரில் மாவட்ட எஸ் பி ஸ்டாலின் உத்தரவின் பேரில், மார்த்தாண்டம் டிஎஸ்பி நல்ல சிவம் அறிவுரையின் பேரில் பார்க்கிங் மற்றும் நோ பார்க்கிங் ஏரியாவில் உள்ள வாகனங்கள் ட்ராபிக் போலீசார் கண்காணித்து வந்தனர்.
இந்த நிலையில் நேற்று நள்ளிரவு டிராபிக் சப்-இன்ஸ்பெக்டர் செல்லசாமி தலைமையில் பார்க்கிங் ஏரியாவில் நிரந்தரமாக நிறுத்தி வைக்கப்பட்ட 16 பைக்குகளை நள்ளிரவு 1 மணிக்கு சங்கிலியால் பூட்டி வைத்து அதிரடி நடவடிக்கை மேற்கொண்டனர்.
நேற்று மாலை வரை இருவர் மட்டுமே போக்குவரத்து போலீசாரை தேடி வந்தனர். இந்த இரு பைக்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு இதே போல் நிறுத்தி செல்லக்கூடாது என அறிவுரை வழங்கி அனுப்பி வைக்கப்பட்டனர். இதுபோன்ற நடவடிக்கை தொடர்ந்து நடைபெறும் என டிராபிக் போலீசார் தெரிவித்தனர்.



