தஞ்சாவூர், அக்டோபர் 1 –
தஞ்சாவூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை எதிர் கொள்ள தயார் நிலையில் உள்ளதாக மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் கூறினார். தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட பேரிடர் மேலாண்மை சார்பில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக அனைத்து துறை அலுவலர்களுட ன் ஆய்வு கூட்டம் கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தலைமையில் நடந்தது.
அப்போது மாவட்ட கலெக்டர் பேசியதாவது: வடகிழக்கு பருவமழை காலங்களில் மாவட்ட கலெக்டர் அலுவலகம், வருவாய் கோட்ட அலுவலகங்கள், தாசில்தார் அலுவலகங்கள் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலகங்களில் 24 மணி நேர கட்டுப்பாட்டு அறை அமைத்து தகவல் தொடர்பு சாதனங்களுடன் சுழற்சி முறையில் பணியாளர்களை நியமித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மீட்பு மற்றும் நிவாரண பணிகளை மேற்கொள்ள வேண்டும். மழையை எதிர்கொள்ள மாவட்ட கோட்ட வட்ட மற்றும் சரக அளவில் 66 குழுக்களும் பல துறைகளையும் ஒருங்கிணைத்து பணியாற்ற ஏதுவாக 10 குழுக்களும் நியமிக்கப்பட்டுள்ளது.
மழையால் பாதிப்பு ஏற்படக்கூடிய கிராமங்கள், நகர்ப்புறங்கள், வேளாண்மை மற்றும் தோட்டக்க கலை பயிர்களுடன் உள்ள இடங்களில் எண்ணிக்கையில் தரவுகள் கண்டறியப்பட்டுள்ளது. அரசு துறையினருடன் ஒருங்கிணைந்து பணியாற்ற தஞ்சாவூர் மாவட்டத்தில் பயிற்சி பெற்ற தன்னார்வலர்கள், 4500 முதல்நிலை பணியாளர்கள், பல்நோக்கு புயல் பாதுகாப்பு மையத்திற்கு 100 முதல் நிலை பணியாளர்கள் வீதம் 14 பல்நோக்கு மையத்திற்கும் 1,400 முதல் நிலை பணியாளர்கள், பாம்பு பிடிப்பவர்கள் மற்றும் மரம் வெட்டுபவர்கள் என அனைத்து மீட்பு குழுவினர் தயார் நிலையில் உள்ளனர்.
மேலும் பொது மக்களை பாதுகாப்பாக தங்க வைப்பதற்காக அடிப்படை வசதிகளும் வைக்கப்பட்டுள்ளது. ஆறுகள் மற்றும் கால் வாய்களில் ஏற்படும் உடைப்புகளை சரி செய்ய 121 இடங்களில் 1 இலட்சத்து 5 ஆயிரத்து 140 மணல் மூட்டைகள் தயார் நிலையில் உள்ளது.
வனத்துறை, தீயணைப்புத்துறை, நெடுஞ்சாலைத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளினால் 162 பொக்லீன் எந்திரங்கள், 98 ஜெனரேட்டர்கள், 89 மரம் வெட்டும் இயந்திரங்கள், 54 படகுகள் மற்றும் 46 பம்பு செட்டுகள் ஆகியவை வட கிழக்கு பருவமழை எதிர் கொள்ள தயார் நிலையில் உள்ளது. மீட்பு மற்றும் நிவாரண பணிகளில் எவ்வித தொய்வும் ஏற்படாத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை துரிதமாக மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். இதில் மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) ரவிச்சந்திரன், வருவாய் கோட்டாட்சியர் நித்யா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.



