சங்கரன்கோவில், செப். 29 –
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் மாஸ்டர் வீவர்ஸ் அசோசியேஷன் சங்க அலுவலகத்தில் சங்கரன்கோவில் பகுதியில் அமைய உள்ள புதிய சிப்காட் வளாகத்தில் சாயப்பட்டறை கழிவு நீர் அமைப்பது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் தென்காசி வடக்கு திமுக மாவட்ட செயலாளர் ராஜா எம்எல்ஏ தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில் மாஸ்டர் வீவர்ஸ் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு ராஜா எம்எல்ஏவிடம் கோரிக்கை வைத்து பேசுகையில்: தமிழ்நாடு அரசு சங்கரன்கோவில் தொகுதியில் சிப்காட் தொழில் பூங்கா அமைக்க உத்தரவு பிறப்பித்துள்ளது. சங்கரன்கோவில் பகுதியில் விசைத்தறி தொழிலை நம்பி பல்லாயிரம் குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர். இத்தொழிலுக்கு சாயம் இடும் சாயப்பட்டறைகள் உள்ளன. மாசு கட்டுப்பாடு வாரியத்தின் விதிமுறைகளுக்கு உட்பட்டு கழிவுநீர் வெளியேற்றம் செய்ய வேண்டிய கட்டாயம் உள்ளது. சுமார் 25 சாயப்பட்டறைகளில் 125000, கழிவு நீர் வெளியேற்ற வேண்டிய நிலை உள்ளது. ஆகவே தமிழக அரசு சாயப்பட்டறை கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைத்து தர வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.
கோரிக்கைகளை கேட்டு அறிந்த ராஜா எம்எல்ஏ பேசுகையில்: மாஸ்டர் வீவர்ஸ் அசோசியேசன் கோரிக்கைகளை முதல்வர், அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று சாயப்பட்டறை கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமையும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். இக்கூட்டத்தில் மாஸ்டர் வீவர்ஸ் நிர்வாகிகள் டிஎஸ்ஏ, சுப்பிரமணியன், சங்கரநாராயணன், சுப்பிரமணியன், குப்பையாண்டி, சங்கரன்கோவில் நகர்மன்ற சேர்மன் கௌசல்யா வெங்கடேஷ், நகரச் செயலாளர் பிரகாஷ், மாணவரணி அமைப்பாளர் வெங்கடேஷ் மற்றும் சங்க உறுப்பினர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.



