ஈரோடு, செப். 27 –
தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கம் சார்பில் ஆயத்த கூட்டம் சித்தோடு டாக்பியா ஹாலில் நடந்தது. மாநில கௌரவ பொது செயலாளர் குப்புசாமி தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் பொதுச் செயலாளர் பாலகிருஷ்ணன் மாநில தலைவர் செல்லமுத்து மற்றும் முன்னாள் மாநில தலைவர் நேசப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு: ஊதிய உயர்வு சுற்றறிக்கையில் உள்ள குளறுபடிகளை நீக்கி ஊதிய உயர்வு வழங்க வேண்டும். நிதி முறைகேடுகள் இல்லாத ஓய்வு பெறும் பணியாளர்களுக்கு ஓய்வு கால பலன்கள் வழங்க வேண்டும். ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கு வழங்கப்படும் ஆயிரம் ரூபாய் கருணை தொகை ஊதியத்தை 5 ஆயிரமாக உயர்த்த வேண்டும். குடும்ப அட்டைதாரர்களுக்கு ப்ளூடூத் முறையில் பொருட்கள் வழங்கப்படுவது போல ரேஷன் கடைகளுக்கு வழங்கும் பொருட்கள் முறையில் வழங்க வேண்டும் என்பது உள்பட 25 அம்ச கோரிக்கைகள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.
இந்த தீர்மானங்களை நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தி வருகிற 6 ம் தேதி ஈரோடு மண்டல பதிவாளர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டமும் காலவரையற்ற வேலை நிறுத்தமும் செய்வது என்றும் முடிவு செய்யப்பட்டது.



