தருமபுரி, செப்டம்பர் 24 –
தருமபுரி மாவட்டம் தருமபுரி ஒன்றியம் ஆண்டிஅள்ளி ஊராட்சி, கொண்டம்பட்டி ஊராட்சி பகுதிகளுக்கான உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் ஆண்டி அள்ளி பஞ்சாயத்து அலுவலகத்தில் நடைபெற்றது. மொரப்பூர் ஒன்றியம் பண்ணை குளம் ஊராட்சி, வகுரப்பம்பட்டி ஊராட்சி உட்பட்ட பகுதிகளுக்கு உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் வகுரப்பம் பட்டி சேவை மையத்தில் நடைபெற்றது. காரிமங்கலம் ஒன்றியம் முருகம்பட்டி ஊராட்சி, பந்தாரஅள்ளி ஊராட்சி பகுதிகளுக்கு உட்பட்ட உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் முருகம்பட்டி சமுதாய கூடத்தில் நடைபெற்றது.
இந்த முகாமில் மாவட்ட ஆட்சித் தலைவர் சதீஷ் கலந்து கொண்டு பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்களை ஆய்வு செய்து தீர்வு காணப்பட்ட மனுதாரர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மேற்கண்ட ஊராட்சிகளில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் மகளிர் உரிமை தொகை, இலவச வீட்டு மனை பட்டா, சிட்டா பட்டா பெயர் மாற்றம், ஆதார் கார்டு, ரேஷன் கார்டு, முதியோர் உதவித்தொகை ஆகியவை வேண்டி துறை சார்ந்த அலுவலர்களிடம் பொதுமக்கள் மனு அளித்தனர். மருத்துவ முகாமில் பிபி, சர்க்கரை நோய் மற்றும் இதர நோய்களுக்கான பரிசோதனைகளை பொதுமக்கள் செய்து கொண்டனர். இந்த முகாம்களில் உள்ளாட்சி பிரதிநிதிகள், துறை சார்ந்த அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்



