சங்கரன்கோவில், செப். 20 –
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் ஶ்ரீ கோமதி அம்பாள் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் வேளாண்மை பொறியியல் துறையின் மூலம் வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளின் பராமரிப்பு தொடர்பான மாவட்ட அளவிலான முகாம் துவக்கி வைக்கும் நிகழ்ச்சி நடந்தது. தென்காசி மாவட்ட கலெக்டர் கமல் கிஷோர் தலைமை வகித்தார். தென்காசி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் ராஜா எம்எல்ஏ, தென்காசி எம்பி ராணி ஸ்ரீகுமார் முன்னிலை வகித்தனர்.
தொடர்ந்து முகாமினை துவக்கி வைத்து பார்வையிட்டனர். காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற்ற இந்த முகாமில் வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளின் இயக்கம் மற்றும் பராமரிப்பு முறைகளை விவசாயிகள் அறிந்து கொள்ளும் வகையில் தனியார் வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் தயாரிக்கும் நிறுவனங்களின் பொறியாளர்கள், துறைசார்ந்த அலுவலர்கள் விவசாயிகளுக்கு பயிற்சி அளித்தனர். டிராக்டர்கள் மற்றும் உபகரணங்களை விவசாயிகள் சிறந்த முறையில் கையாண்டு இயக்கிட கற்றுத்தரபட்டது.
மேலும் வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளின் திறன்மிகு இயக்கம் மற்றும் பராமரிப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இம்முகாமில் சங்கரன்கோவில் நகராட்சி சேர்மன் கௌசல்யா வெங்கடேஷ், வேளாண்மை பொறியியல் துறை செயற்பொறியாளர் கிருஷ்ணமூர்த்தி, உதவிசெயற்பொறியாளர் சுந்தர்ராஜன், தாசில்தார் பரமசிவன், திமுக நகரச் செயலாளர் பிரகாஷ், மாணவரணியினர் உதயகுமார், வெங்கடேஷ் மற்றும் உதவி பொறியாளர்கள் வேளாண்மை துறை, தோட்டக்கலைத்துறை அலுவலர்கள், விவசாயிகள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.



