கிருஷ்ணகிரி, செப். 17 –
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை ஒன்றியம் நடுப்பட்டு பஞ்சாயத்து குப்பநத்தம் கிராமத்தில் சுமார் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் முறையான குடிநீர் வசதி இல்லை. ஒகேனக்கல் கூட்டு குடிநீர் பற்றாக்குறையாக உள்ளதாகவும், அப்பகுதியில் ஏரியில் உள்ள கிணற்றை பல வருடங்களாக தூர் வராமல் அப்படியே குடிநீர் வழங்குவதால் குழந்தைகளுக்கு தொற்றுநோய் பரவி வருகிறது. அரசு தொடக்க பள்ளி மாணவர்களுக்கு குடிநீர் மற்றும் கழிப்பிட வசதிக்கு தேவையான தண்ணீர் கிடப்பதில்லை.
அங்கன்வாடி கட்டிடம் பழுதடைந்ததால் இடித்து பல மாதங்களாக மாற்று கட்டிடத்தில் குழந்தைகள் உள்ளனர். ஆனால் அந்த கட்டிடம் சுற்றியும் புதர் மண்டி இருப்பதால் விஷ ஜந்துக்கள் ஏராளமாக நடமாடி வருகிறது. குழந்தைகளுக்கு பாதிப்பு ஏற்பட கூடும் என குழந்தைகளின் பெற்றோர் அஞ்சுகின்றனர். மேலும் 1500 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசிக்கும் இந்த கிராம மக்களுக்கு சுடுகாட்டிற்கு 15 சென்ட் இடம் தான் ஒதுக்கியுள்ளனர். புறம்போக்கு இடம் நிறைய உள்ளது. அந்த இடத்தில் கூடுதலாக இடம் ஒதுக்கி வழிப்பாதை ஏற்படுத்தி தரவேண்டும். மின் கம்பங்களில் மின் கம்பிகள் மிகவும் தாழ்வாக உள்ளது. எதிர்பாராத விதமாக கைகளை மேலே தூக்கினால் உயிர் சேதம் ஏற்பட்டுவிடும்.
நூலக கட்டடம் மட்டும் உள்ளது. நிறைய படித்த இளைஞர்கள் உள்ளனர். நூலகத்திற்கு தேவையான அடிப்படை வசதி செய்து தர வேண்டும். எந்த ஒரு அடிப்படை வசதியும் இல்லாத எங்கள் கிராமத்திற்கு மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என குப்பநத்தம் கிராம இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர். தவறும் பட்சத்தில் 2026 ல் நடைபெறும் சட்டமன்ற தேர்தலை புறக்கணிப்பதாக கூறுகின்றனர்.



