நாகர்கோவில், செப்டம்பர் 10 –
குமரி மாவட்ட கலெக்டர் அழகுமீனா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழகம் (தாட்கோ) ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சார்ந்தவர்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையில் ஆன பயிற்சிகளை வழங்கி வருகிறது. அதன் அடிப்படையில் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின இனத்தைச் சேர்ந்தவர்களுக்கு ஜெர்மன் மொழி தேர்வுக்கான பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
பயிற்சியினை பெற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இனத்தைச் சார்ந்தவராக இருக்க வேண்டும். மற்றும் பி.எஸ்.சி. நர்சிங், பொது நர்சிங் மற்றும் ஜிஎன்எம் டிப்ளமோ, பி.இ. (மெக்கானிக்கல் இன்ஜினியரிங்), பி.இ. (பயோ மெடிக்கல் இன்ஜினியரிங்), பி.இ. (மின் மற்றும் மின்னணு பொறியியல் மற்றும் பி.டெக். தகவல் தொழில்நுட்பம்) ஆகிய படிப்புகளில் தேர்ச்சி பெற்றவர்களாக இருக்க வேண்டும். மேலும் வயது 21 முதல் 35 வரை நிரம்பியிருக்க வேண்டும்.
குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருக்க வேண்டும். பயிற்சிக்கான கால அளவு 9 மாதமும் விடுதியில் தங்கி படிப்பதற்கான செலவினத் தொகை தாட்கோவால் ஏற்கப்படும். பயிற்சி முடிந்தவுடன் தகுதியான நபர்களை பயிற்சி அளிக்கும் நிறுவனத்தின் மூலமாக தேர்வு செய்து அந்நிறுவனத்தின் சார்பாக ஜெர்மனி நாட்டில் பணிபுரியவும், ஆரம்ப கால மாத ஊதியமாக ரூ.2.50 இலட்சம் முதல் ரூ. 3 லட்சம் வரை வருவாய் ஈட்டவும், வேலைவாய்ப்பு உருவாக்கப்படும். பயிற்சியில் சேர்வதற்கு www.tahdco.com என்கிற தாட்கோ இணையதளத்தில் பதிவு செய்யலாம் இவ்வாறு செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


